/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகராட்சி பள்ளியில் மாணவர் தேர்தல் தலைமை பண்பு வளர்க்க நடவடிக்கை
/
நகராட்சி பள்ளியில் மாணவர் தேர்தல் தலைமை பண்பு வளர்க்க நடவடிக்கை
நகராட்சி பள்ளியில் மாணவர் தேர்தல் தலைமை பண்பு வளர்க்க நடவடிக்கை
நகராட்சி பள்ளியில் மாணவர் தேர்தல் தலைமை பண்பு வளர்க்க நடவடிக்கை
ADDED : ஜூலை 27, 2024 12:16 AM
தாம்பரம், பழைய தாம்பரத்தில், நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, பழைய தாம்பரம், கடப்பேரி, கன்னடப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 620 பேர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், கற்றல், கற்பித்தல் மட்டுமின்றி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில், பல்வேறு போட்டிகள், கல்வி சாரா இணை செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், மாணவர்கள் மத்தியில் தலைமை பண்புகளை மேம்படுத்தவும், பொறுப்பு, உரிமைகளை பற்றி அறிந்து கொள்ளவும், இப்பள்ளியில், மூன்று ஆண்டுகளாக மாணவர் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர், துணை தலைவர், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் வாயிலாக பல்வேறு விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
இந்தாண்டிற்கான வேட்பு மனு தாக்கல், நேர்காணல், வேட்பாளர் பட்டியல், பரப்புரை, சின்னம் ஒதுக்கீடு என, தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடத்தப்பட்டன. தலைவர் பதவிக்கு 10ம் வகுப்பை சேர்ந்த ஏழு மாணவர்களும், துணை தலைவர் பதவிக்கு 9ம் வகுப்பை சேர்ந்த ஐந்து மாணவர்களும் போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
பொது தேர்தல் எப்படி நடக்குமோ அதுபோல், 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் வரிசையில் நின்று, ஓட்டுச்சாவடிக்கு சென்று, தங்களுக்கு விருப்பமான மாணவர்களுக்கு ஓட்டளித்தனர். முகவர், தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலரும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் முடிவு, ஜூலை 29ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
தலைமை ஆசிரியை ந.ராஜேஸ்வரி கூறுகையில், ''சுற்றுச்சூழல், சுகாதாரம், கலாசாரம் மற்றும் பண்பாடு, விளையாட்டு, உணவு போன்ற துறைகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு துறைக்கும், ஒரு அமைச்சர் நியமிக்கப்படுவர். அவர்கள், மற்ற மாணவர்களுக்கு தங்களது துறை சார்ந்த நற்பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்று தருவர்,'' என்றார்.