/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடி குப்பை கிடங்கில் திடீர் தீ
/
பெருங்குடி குப்பை கிடங்கில் திடீர் தீ
ADDED : ஏப் 02, 2024 12:26 AM

பெருங்குடி, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அடுத்த பெருங்குடியில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 225 ஏக்கர் பரப்பு குப்பை கிடங்கு உள்ளது. தினமும் 5,000 டன் குப்பை மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இங்கு, நேற்று முன்தினம் இரவு திடீரென தீ பிடித்துக் கொண்டது. பணியில் இருந்த ஊழியர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
துரைப்பாக்கம், மேடவாக்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, இரு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கடந்த 2022 ஏப்., 27ல், குப்பை கழிவுகளில் மீத்தேன் வாயு உருவாகி, 15 ஏக்கர் பரப்பில் தீ பரவியது. இதனால், 5 கி.மீ., சுற்றுவட்டாரத்திற்கு புகை மண்டலம் உருவானது.
கண் எரிச்சல், சுவாச கோளாறால் மக்கள் அவதிப்பட்டனர். தீயை அணைக்க மூன்று நாட்களானது குறிப்பிடத்தக்கது.
பின், அதே ஆண்டு ஆக., 1ம் தேதி, மீண்டும் மீத்தேன் வாயு உருவாகி, தீ பற்றிக்கொள்ள, எட்டு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. தற்போது, கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கி உள்ளதால், முந்தைய சம்பவம் போல் மீண்டும் மீத்தேன் வாயு உருவாகி, தீ பற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
எனவே, குப்பை கிடங்கு அருகே நிரந்தரமாக தீயணைப்பு வாகனம் ஒன்றை நிறுத்தி வைக்க வேண்டும் என, ஊழியர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

