/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவமனை இயங்க அனுமதியளித்த உத்தரவுக்கு தடை
/
மருத்துவமனை இயங்க அனுமதியளித்த உத்தரவுக்கு தடை
ADDED : செப் 17, 2024 12:34 AM
சென்னை, பம்மலில், பி.பி.ஜெயின் மருத்துவமனை உள்ளது. உடல் எடை குறைப்பு சிகிச்சைக்காக, புதுச்சேரியைச் சேர்ந்த ேஹமச்சந்திரன் என்பவர், இந்த மருத்துவமனையில் சேர்ந்தார்.
பின், மரணம் அடைந்தார். இதையடுத்து, மருத்துவமனை பதிவை தற்காலிகமாக ரத்து செய்து, செங்கல்பட்டு சுகாதார பணிகளின் இணை இயக்குனர், கடந்த மே 4ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பி.பி.ஜெயின் மருத்துவமனை நிர்வாகம், வழக்கு தொடர்ந்தது. மனுவை விசாரித்த, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், மயக்க மருந்து கொடுக்கவும், ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ ஒப்புதலை தாக்கல் செய்யும்படி கூறியிருந்தால், மருத்துவமனை தரப்பில் ஆவணங்களை அளித்திருப்பர். துரதிருஷ்டவசமாக, இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த ஒரே சம்பவத்திற்காக, பதிவை தற்காலிகமாக ரத்து செய்வது என்பது அதிகபட்சமானது. அரசின் உத்தரவால், நோயாளிகள் பாதிக்கப்படுவர். எனவே, செங்கல்பட்டு இணை இயக்குனரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மருத்துவமனை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து, மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குனர், செங்கல்பட்டு மாவட்ட இணை இயக்குனர், மேல்முறையீடு செய்தனர். மனுவில் 'மருத்துவமனையிலும், ஆப்ரேஷன் தியேட்டரிலும் குறைபாடுகள் இருந்தன. இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை.
பதில் மனுத் தாக்கல் செய்ய சந்தர்ப்பம் வழங்கவில்லை. மரணத்துக்கான காரணத்தை, தவறாக காட்டியுள்ளனர்' என கூறப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த முதல் அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க, பி.பி.ஜெயின் மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.