/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தமிழ் புத்தாண்டு: கோவில்களில் அலைமோதிய மக்கள்
/
தமிழ் புத்தாண்டு: கோவில்களில் அலைமோதிய மக்கள்
ADDED : ஏப் 15, 2024 01:36 AM

சோபகிருது ஆண்டில் இருந்து குரோதி ஆண்டு நேற்று பிறந்தது. தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பல வீடுகளில் சித்திரை கனி காணும் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெரியவர்கள் முதல் சிறார் வரை, நேற்று அதிகாலை சித்திரை கனி கண்டு மகிழ்ந்தனர்.
ஆண்டவர் கோவில்
அதேபோல, புத்தாண்டை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வடபழனி ஆண்டவர் கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
காலை மூலவர் முருகப்பெருமான் தங்க நாணய கவசம், தங்கவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வசதிக்காக நாள் முழுதும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அஷ்டலட்சுமி கோவில்
பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவிலில், நேற்று காலை 6:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணிவரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டது. அஷ்ட லட்சுமி சன்னதிகளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதை தொடர்ந்து குரோதி வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
அதேபோல, தி.நகர், வெங்டேஸ்வர பெருமாள், மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பாரிமுனை கற்பகாம்பாள், திருநீர்மலை ரங்கநாதர், குன்றத்துார் முருகன், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மந்தைவெளி பாக்கத்தில் கல்யாண் நகர் அசோசியேஷன் இயங்கி வருகிறது. இதன் சார்பில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று மாலை அகில இந்திய விஷ்ணு சகஸ்ரநாம பெடரேஷன் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.
தொடர்ந்து ராஜேஷின் பக்திப் பாடல்கள் அரங்கேறியது. மாலை 6:00 மணிக்கு விஜய் சர்மா சாஸ்திரிகளின் பஞ்சாங்க படனமும் நடந்தது.
கவர்னர் ரவி தரிசனம்
தமிழ் புத்தாண்டு தினம், நேற்று தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி கவர்னர் ரவி, தன் குடும்பத்தினருடன் மயிலாப்பூரில் உள்ள, திருவள்ளுவர் கோவிலுக்கு சென்றார். தெய்வப்புலவர் திருவள்ளுவரை தரிசனம் செய்தார்.

