/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண் தீக்குளிப்பு 2வது கணவர் காதலியுடன் கைது
/
இளம்பெண் தீக்குளிப்பு 2வது கணவர் காதலியுடன் கைது
ADDED : மே 30, 2024 12:10 AM
தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் தெருவைச் சேர்ந்தவர் வினிதா, 26; தனியார் நிறுவனத்தில் வசூலிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு, 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.
பின், ஐந்து ஆண்டுகளாக, எலக்ட்ரீஷியனாக வேலை பார்க்கும், ராயபுரம், இந்திரா காந்தி நகர் குடியிருப்பைச் சேர்ந்த ராம், 34, என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், ராம், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சோனியா, 25, என்ற பெண்ணுடன், சில மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளார். இரு தினங்களுக்கு முன், இதை வினிதா தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால், வினிதா - ராம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த வினிதா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து விசாரிக்கும் தண்டையார்பேட்டை போலீசார், இரண்டாவது கணவர் ராம் மற்றும் சோனியா ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.