/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் மது அருந்திய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
/
விமானத்தில் மது அருந்திய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
விமானத்தில் மது அருந்திய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
விமானத்தில் மது அருந்திய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : மே 10, 2024 11:58 PM
சென்னை, டில்லி -- சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணத்தின் போது மது அருந்திய வாலிபரை பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
டில்லியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று முன்தினம் 132 பேருடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.
அந்த விமானத்தில் துாத்துக்குடியை சேர்ந்த இசக்கியப்பன், 30, என்பவரும் பயணம் செய்தார்.
இவர், டில்லியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். விடுமுறைக்காக, சொந்த ஊர் செல்வதற்காக சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்த போது, அவர் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து, தண்ணீர் கலந்து குடிக்க துவங்கினார். இவரின் இந்த செயலுக்கு, பயணியர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இசக்கியப்பன் அதைப்பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்தார்.
'சர்வதேச வெளிநாட்டு விமானங்களில் குடிப்பதற்கு மது கொடுக்கின்றனர். ஆனால் உள்நாட்டு விமானத்தில், நாங்களே கொண்டு வந்து குடிப்பதற்கு அனுமதி கிடையாதா' என்று வாதம் செய்தார்.
பயணியரின் புகாரை தொடர்ந்து, அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியதும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, இசக்கியப்பனை அழைத்து வந்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், டில்லியில் விமானத்தில் ஏறும்போதே, இசக்கியப்பன் இந்த மதுபாட்டிலை தன் உள்ளாடைக்குள் மறைத்து விமானத்தில் ஏறியது தெரியவந்தது.
இசக்கியப்பன் போலீசாரிடம் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அதன் பின் போலீசார் அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.