/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலுக்குள் புகுந்து பாத்திரம் திருடியோர் கைது
/
கோவிலுக்குள் புகுந்து பாத்திரம் திருடியோர் கைது
ADDED : மார் 01, 2025 01:09 AM

அமைந்தகரை, அமைந்தகரை, என்.எஸ்.கே., சாலையில், அண்ணா ஆர்ச் அருகில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான தேவி பெரிய பாளையத்தம்மன் கோவில் உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோவில் பூசாரி வழக்கம்போல் கோவிலை திறந்தார். அப்போது, கோவில் பின்புற தடுப்பு தகரம் உடைக்கப்பட்டிருந்தது. சோதித்த போது, சமையலுக்கு பயன்படுத்தும் அலுமினிய பாத்திரம், ஆடியோ செட்கள் திருடுபோனது தெரிந்தது.
இதுகுறித்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி தங்கராஜ், 55, என்பவர் அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அக்கோவிலின் அருகில் உள்ள ஜடாமுனீஸ்வரர் கோவில் வழியாக உள்நுழைந்த மர்ம நபர்கள், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
அதன் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்ட அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்த ஹரிகுமார், 46, அமைந்தகரை, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த்குமார், 34, மற்றும் அப்துல்ரகுமான், 45, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அப்துல் ரகுமான், ஹரிகுமார் இருவரும், கோவில் தகரத்தை உடைத்து உள்ளே நுழைந்து, பொருட்களை திருடி, பிரசாந்த்குமாரின் ஆட்டோவில் எடுத்துச் சென்றது தெரிந்தது. இவர்களிடமிருந்து, பேட்டரி, ஆம்ப்ளிபையர், அலுமினிய டபரா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.