/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
34 ஆண்டு போராடி பூர்வீக வீட்டை மீட்ட அமெரிக்க வாழ் பெண் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி
/
34 ஆண்டு போராடி பூர்வீக வீட்டை மீட்ட அமெரிக்க வாழ் பெண் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி
34 ஆண்டு போராடி பூர்வீக வீட்டை மீட்ட அமெரிக்க வாழ் பெண் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி
34 ஆண்டு போராடி பூர்வீக வீட்டை மீட்ட அமெரிக்க வாழ் பெண் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி
ADDED : மே 10, 2024 12:22 AM

அமைந்தகரை, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டீனாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற விக்டர் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி வீடு, அமைந்தகரை அடுத்த ஷெனாய் நகர், மேற்கு பூங்கா சாலையில் உள்ளது.
விக்டர் இந்த வீட்டின் கீழ் தளத்தை மட்டும், கடந்த 1990ல் சாந்தராஜ் என்பவருக்கு, 1,500 ரூபாய் வாடகைக்கு விட்டு விட்டு, மனைவியுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்.
அவ்வப்போது, சென்னை வரும் விக்டர், முதல் தளத்தில் தங்கி வந்துள்ளார்.
அமெரிக்காவில், கடந்த 1997ல் விக்டர் இறந்த பின், இந்த வீட்டை அவரது மகள் மாலதி பராமரித்து வந்துள்ளார். இதற்கிடையில் சாந்தராஜ், 1997ல் இருந்து வாடகை தராமல், முழு வீட்டையும் அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளார்.
சாந்தராஜுக்குப் பின், அவரது உறவினரான தினேஷ்,32, என்பவர் இந்த வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், மாலதி பெயரில் இருந்த வீடு, அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அவரது மகள் தீபா, 50, பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
பின், தாத்தாவின் இந்த வீட்டை மீட்க, பல ஆண்டுகளாக அமெரிக்கா வாழ் பெண்ணான தீபா முயற்சித்துள்ளார்.
தீபாவை குண்டர்கள் வைத்து தினேஷ் மிரட்டியதால், அமெரிக்கா துாதகரம் வாயிலாக, சென்னை போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, கடந்த ஏப்ரலில் தீபா, அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில் தினேஷ், ஆவணங்களின்றி தீபாவின் பூர்வீக வீட்டை அபகரித்தது தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார், நேற்று முன்தினம் தினேஷை வீட்டை விட்டு வெளியேற்றி, வீட்டின் சாவியை தீபாவிடம் ஒப்படைத்தனர். தீபா, கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து, தீபா கூறுகையில்,''எங்கள் வீட்டை அபகரித்து, வீட்டில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். 34 ஆண்டுகளுக்குப் பின், வீட்டை மீட்டுக் கொடுத்த சென்னை போலீசாருக்கு மிக்க நன்றி,'' என்றார்.