ADDED : ஆக 08, 2024 12:46 AM

சென்னை, வங்க தேசத்தைச் சேர்ந்தவர் சுசில் ரஞ்சன், 73. அவரது மனைவி புரோவா ராணி, 61, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
அவரது மருத்துவ சிகிச்சைக்காக, வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, கடந்த மாதம் வந்தனர்.
சிகிச்சை முடித்து, வங்க தேச தலைநகர் டாக்கா செல்ல, இருவரும் 5ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆனால், வங்க தேசத்தில் நிலவும் வன்முறை காரணமாக, சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள், தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், அந்த தம்பதி, சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் உள்ள கழிப்பறை அருகே தங்கியிருந்தனர்.
இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது குறித்து அறிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், விமான நிறுவன ஊழியர்கள் மற்றும் விமான நிலையத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு, அத்தம்பதிக்கு தேவையான உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, தம்பதியை காரில் அழைத்து சென்று, பல்லாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
நேற்று மதியம் 1:55 மணிக்கு, சென்னையில் இருந்து டாக்காவுக்கு 'இண்டிகோ' விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.
இந்த நிகழ்வு குறித்து சுசில் ரஞ்சன் கூறியதாவது:
மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக, நாடுவிட்டு நாடு வந்தோம். எங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் எப்படி திரும்பி செல்வோம் என நினைத்து வருந்தினோம்.
இந்தியாவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட போது, நோயால் பாதிக்கப்பட்ட மனைவியுடன் எப்படியாவது சென்றுவிட வேண்டும் என எண்ணினேன்.
இங்குள்ள தமிழக மக்கள், எங்களுக்கு தேவையான உதவிகளை செய்ததை நான் என்றும் நினைவு கூறுவேன். கடுமையான நேரத்திலும் எங்களுக்காக உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.