/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாட்டு தொழுவான சமூக கூடம் அரசன்கழனியில் அவலம்
/
மாட்டு தொழுவான சமூக கூடம் அரசன்கழனியில் அவலம்
ADDED : மார் 10, 2025 12:47 AM

அரசன்கழனி, பரங்கிமலை ஒன்றியம், ஒட்டியம்பாக்கம் ஊராட்சி அரசன்கழனியில் சமூக நலக்கூடம் கட்டப்பட்டு உள்ளது.
சுற்றுச்சுவர் இல்லாத இக்கூடத்தை பலர், மாட்டு தொழுவமாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், உரம் விற்பனை கிடங்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
தவிர, சாலை மற்றும் சமூக நலக்கூடத்தில் கிடக்கும் சாணங்களை, அதன் வளாகத்தின் ஒரு பகுதியில் கொட்டி உரமாக்கி, அதை தனியாருக்கு விற்றும் வருகின்றனர்.
தவிர, வளாகத்தில் 5.25 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள சுகாதார கழிப்பறை, இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
வளாகம் முழுக்க சாணங்களாக உள்ளதால், வீட்டு விசேஷத்திற்கு இக்கூடத்தை பதிவு செய்ய, யாரும் முன்வருவதில்லை.
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கூடம், ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாய்ப்பாகவும், விஷ ஜந்துகள் தஞ்சமடையும் இடமாக உள்ளன.
அதனால், அதிக பணம் கொடுத்து, தனியார் மண்டங்களை, இப்பகுதியினர் நாடி வருகின்றனர். முகூர்த்த நாட்களில், வேறு மண்டபங்கள் கிடைக்காத சூழலில் தான், இக்கூடம் பதிவு செய்யப்படுகிறது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சுற்றுச்சுவர் அமைத்து, சமூக நலக்கூடத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.