ADDED : மார் 31, 2024 01:30 AM
திருவள்ளூர் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி, தே.மு.தி.க., வேட்பாளர் நல்லத்தம்பி நிற்கிறார். இவரது அறிமுக கூட்டம், பூந்தமல்லியில் நேற்று நடந்தது.
கூட்டம் துவங்கும் முன்பே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ரமணா, அப்துல் ரஹீம், முன்னாள் எம்.பி., வேணுகோபால், பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ., மணிமாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மேடைக்கு வந்தனர். ஆனால், வேட்பாளர் நல்லத்தம்பி 15 நிமிடங்கள் தாமதமாகவே வந்தார்.
கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தவமாய் தவமிருந்தனர். தற்போது, தே.மு.தி.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கும் அமைச்சர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக, கட்சியினர் புலம்பினர்.
இந்த புலம்பல் அடங்கிய சிறிது நேரத்தில், அ.தி.மு.க., நிர்வாகிகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டது.
கூட்டத்தில், முன்னாள் எம்.பி., வேணுகோபால் பேசும்போது, மேடையில் உட்கார்ந்திருந்த மணிமாறன் திடீரென எழுந்துச் சென்றார். இதை கவனித்த பூந்தமல்லி அ.தி.மு.க., நகர செயலர், அவரை சமாதானம் செய்து மீண்டும் இருக்கையில் அமர வைத்தார்.
அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த வேணுகோபாலை பார்த்து கை நீட்டி, ''இந்த தொகுதி கெட்டதற்கு காரணமே இந்த ஆளுதான் காரணம். இவர் மட்டும் இல்லையென்றால் நான் எம்.எல்.ஏ., ஆகி இருப்பேன்,'' என சத்தமாக வசைப்பாடினார்.
முன்னாள் அமைச்சர்கள், வேட்பாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் மணிமாறன் இவ்வாறு நடந்து கொண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடைசி புகைச்சல், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பிடித்துள்ள புரட்சி பாரதம் கட்சி, இந்த வேட்பாளர் கூட்டத்தை புறக்கணித்ததுதான்.
திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். அ.தி.மு.க., சின்னத்தில் நிற்பதாக கூட தெரிவித்திருந்தனர்.
ஆனால், தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டதால், விரக்தியடைந்த புரட்சி பாரதம் கட்சியினர், தேர்தல் பணிகளில் ஈடுபடாமலே உள்ளனர். தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படுத்தாமல் அமைதி காத்து வருகின்றனர். அதனாலே, இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
- நமது நிருபர் -

