/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசிடம் தப்பியவர் கோர்ட்டில் சுற்றிவளைப்பு
/
போலீசிடம் தப்பியவர் கோர்ட்டில் சுற்றிவளைப்பு
ADDED : மே 07, 2024 12:16 AM

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, பி.எஸ்.மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 25. பைக் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இவரை, கடந்த 4ம் தேதி இரவு, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் மற்றும் போலீசார் பிடித்து, புளியந்தோப்பு போலீசில் ஒப்படைத்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, புழல் சிறையில் அடைக்க போலீஸ்காரர்களான பாஸ்கர் மற்றும் மகேந்திரன் ஆகியோர், இவரை அழைத்துச் சென்றனர். இவருடன், மற்றொரு குற்றவாளியான, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தாக்கூர் இஸ்லாம், 22, என்பவரும் இருந்தார்.
அம்பேத்கர் கல்லுாரி சாலை - ஸ்டீபன்சர் சாலை சந்திப்பில் ஆட்டோவில் செல்லும்போது, நுாதனமாக மனோஜ்குமார் போலீசாரிடமிருந்து தப்பினார்.
இந்த நிலையில், எழும்பூர் 10வது கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜராக வந்தவரை புளியந்தோப்பு உதவி கமிஷனரின் தனிப்படை போலீசார், ஆஜராவதற்கு முன் கைது செய்தனர். தற்போது, போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி சென்ற வழக்கிலும், மனோஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.