/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமூல் கேட்டு மிரட்டல் ரவுடி வெட்டிக் கொலை
/
மாமூல் கேட்டு மிரட்டல் ரவுடி வெட்டிக் கொலை
ADDED : ஜூன் 12, 2024 12:41 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், அஞ்சுகம் நகரை சேர்ந்த ரவுடி ராசையா, 27. திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பதிவான பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருவொற்றியூர் பகுதிகளில் முரளி என்பவர் கஞ்சா விற்று வந்துள்ளார். ரவுடி ராசையாவும் கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய பகுதியில் கஞ்சா விற்க வேண்டும் என்றால், மாமூல் தர வேண்டுமென முரளியை தாக்கி மிரட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, திருவொற்றியூர், அஜாக்ஸ் புதிய பேருந்து நிலையம் அருகில், ராசையா தன் நண்பர் நிர்மல்குமார் என்பவருடன் மது அருந்தினார். அப்போது முரளி தன் கூட்டாளிகள் மூவருடன் வந்து, ராசையாவை சரமாரியாக வெட்டி தப்பினார்.
இதில் பலத்த காயமடைந்த ராசையாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் அங்கு முதலுதவி பெற்று, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே ராசையா உயிரிழந்தார்.
திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான முரளி உட்பட நால்வரை தேடி வருகின்றனர்.