/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறவைகள் எண்ணிக்கை வேடந்தாங்கலில் குறைந்தன
/
பறவைகள் எண்ணிக்கை வேடந்தாங்கலில் குறைந்தன
ADDED : ஜூன் 03, 2024 02:33 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, வங்க தேசம், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உட்பட பல நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், பறவைகள் வருகின்றன.
மார்ச், ஏப்., மே மாதங்களின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.
கடந்த 2023- - 24-ல், கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, பாம்புக்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன.
அப்போது, 40,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து, 2 மடங்காக மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றன.
இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக சரணாலயத்தில் இருந்து, தங்கள் தாய்நாட்டிற்கு பறவைகள் சென்ற வண்ணம் உள்ளன. தற்போது, 1,000க்கும் குறைவான பறவைகளே உள்ளன.
சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் மற்றும் வங்க தேசம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வர்ண நாரை, கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்புதாரா உள்ளிட்ட பறவை இனங்களே தற்போதும் தங்கியுள்ளன.
குறிப்பாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனைத்து பறவைகளும், வேடந்தாங்கலுக்கு வந்த பின்னரே, ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வர்ண நாரை பறவைகள் வருகின்றன.
பின், சரணாலயத்தில் இருந்து 'சீசன்' முடியும் மே மாதத்தின் கடைசி மற்றும் ஜூன் முதல் வாரத்தில், அனைத்தும் செல்கின்றன.
வேடந்தாங்கல் ஏரியில் உள்ள மரங்களில் பறவைகள் அமர்ந்து, கூடு கட்டி, அவற்றின் எச்சங்களால் மரங்களில் உள்ள பசுந்தழைகள் வர்ணம் பூசியது போன்று வெள்ளையாக காணப்படும். தற்போது, பறவைகள் இல்லாததால், மரங்கள் அனைத்தும் துளிர் விட்டு, பசுமை போர்த்தியது போல் உள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய அதிகாரிகள் கூறியதாவது:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, கடந்தாண்டு செப்., முதல், தற்போது ஏப்ரல் வரை, பெரியவர்கள் 75,000 மற்றும் சிறியவர்கள் 19,000 என, மொத்தம் 94,000க்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்.
ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் சீசன் முடிந்து, சரணாலயத்தில் உள்ள அனைத்து பறவைகளும், தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்லும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.