/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆந்திராவில் தஞ்சம் அடைய ஏகனாபுரம் மக்கள் முடிவு
/
ஆந்திராவில் தஞ்சம் அடைய ஏகனாபுரம் மக்கள் முடிவு
ADDED : ஜூன் 16, 2024 12:33 AM
பரந்துார், சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு தேவைப்படும் மொத்தம், 5,400 ஏக்கர் நிலத்தில், 3,750 ஏக்கர் தனியார் வசம் உள்ளது. பரந்துார் விமான நிலைய திட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது.
பரந்துார் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராம மக்கள், 700 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயம் நீர் நிலைகளை காக்க பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், சொந்த ஊரைவிட்டு வெளியேறி, ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைய உள்ளதாக, ஏகனாபுரம் போராட்டக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
கிராமத்தினர் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல், தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியை துவங்கி உள்ளது.
சொந்த ஊரில் வாழ தகுதி இல்லாததால், தமிழகத்தை விட்டு ஆந்திர மாநிலம் சித்துார் பகுதிக்கு தஞ்சம் போக முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாக வரும் 24ம் தேதி, காலை 9:30 மணிக்கு, ஏகனாபுரம் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் ஒன்று கூடி முடிவு செய்ய உள்ளோம்.
இவ்வாறு, போராட்டக் குழுவினர் தெரிவித்துஉள்ளனர்.