/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குட்கா விற்கும் சிறுவியாபாரிகளை நசுக்கி 'கல்லா' கட்டும் போலீசார்
/
குட்கா விற்கும் சிறுவியாபாரிகளை நசுக்கி 'கல்லா' கட்டும் போலீசார்
குட்கா விற்கும் சிறுவியாபாரிகளை நசுக்கி 'கல்லா' கட்டும் போலீசார்
குட்கா விற்கும் சிறுவியாபாரிகளை நசுக்கி 'கல்லா' கட்டும் போலீசார்
ADDED : மே 17, 2024 12:56 AM
சென்னை, குட்காவை ஒழிப்பதற்கு பதில், வியாபாரிகளை மிரட்டி, தங்கள் வருவாயை பெருக்கி, ‛கல்லா' கட்டுவதில் கவனம் செலுத்தும் போலீசாரை, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர், ‛சீர்படுத்த' வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், ஆவடி மாநகர எல்லைக்குள் கஞ்சா, குட்கா, மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதனால், ஆவடி கமிஷனரகத்திற்கு கீழ் உள்ள அம்பத்துார், ஆவடி, திருமுல்லைவாயில், செங்குன்றம், சோழவரம், மாதவரம் பால்பண்ணை, கொரட்டூர், அம்பத்துார் தொழிற்பேட்டை என, 25 காவல் நிலையங்கள் வாயிலாக, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய போலீசாரை, ‛ஸ்பெஷல் டீம்' ஆக அமைத்து, குட்கா வாங்கி பயன்படுத்துவோர் வாயிலாக, அவற்றை மளிகை, பெட்டிக்கடை, டீ கடைகளில் மறைத்து வைத்து விற்பவர்களை மடக்கிக் பிடிக்கின்றனர்.
அவர்களிடம், 'உங்களை கைது செய்து, சிறையில் அடைத்தால், விடுதலையாக ஒரு மாதமாகி விடும். இந்த கடுமையான வெயிலில், உங்களுக்கு சிறை வாழ்க்கை தேவையா என்பதை, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' என,'அன்பாக' மிரட்டி, 50,000 ரூபாய் முதல், 2 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து விடுகின்றனர்.
சமீபத்தில் செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
குட்கா விற்போரும் சிறைக்கு பயந்து, போலீசார் கேட்கும் தொகையை கொடுத்து, சிறைக்கு செல்லாமல் தப்பிக்கின்றனர். போலீசுக்கு பணம் கொடுத்துவிட்டோம் என, அடுத்த நாள் கடையை திறக்க முடியாது.
அடுத்த, 15 நாட்களுக்கு பிறகு தான், கடையை திறக்க வேண்டும். அதுவரை அந்த கடையின் சாவி, அந்த பகுதி காவல் நிலையத்தில் தான் இருக்கும்.
இதற்கு காரணம், உடனே திறந்தால், பணம் வாங்கிக்கொண்டு கடையை திறக்க அனுமதித்து விட்டதாக தகவல் பரவும் என்று, மேற்கண்ட ‛நுாதன' நடவடிக்கையை போலீசார் கடைபிடிக்கின்றனர்.
பணம் கொடுத்து பாதிக்கப்படும் சிறுகடை வியாபாரிகள், அதிகபட்சம் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கிடைக்கும் என்ற ஆசையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு, பெரிய தொகையை போலீசுக்கு, ‛தண்டம்' அழுது, தீராத கடனாளியாகின்றனர்.
அந்த வகையில், ஆவடி மாநகர காவல் எல்லையில் உள்ள காவல் நிலையங்கள், வாரத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றன.
அதனால், குட்கா ஒழிப்பிற்காக, போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுத்தாலும், அவருக்கு கீழ் பணியாற்றுவோரால், அவரது உழைப்பு, கடலில் கரைந்த பெருங்காயமாகி விடுகிறது.

