/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் ரவுடிகள் வேட்டையை துவக்கியது போலீஸ்?
/
சென்னையில் ரவுடிகள் வேட்டையை துவக்கியது போலீஸ்?
UPDATED : மே 01, 2024 08:41 AM
ADDED : மே 01, 2024 07:31 AM

போதை ரவுடி கும்பலின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், போலீசார் களம் இறங்கியுள்ளனர்.
சென்னை நகரில், போதை ரவுடி கும்பலால் பல குற்றங்கள் நடந்து வருகின்றன. கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட சம்பவங்களில் அவர்கள் ஈடுபடுவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.போதை ரவுடி கும்பலால் நடக்கும் குற்றங்கள் குறித்தும், மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும், நேற்று முன்தினம் நம் நாளிதழில் 'கொலை நகரம்' எனும் தலைப்பில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் நடவடிக்கைகளை போலீசார் துவக்கிஉள்ளனர்.
கொலை கும்பல் கைது
அதேபோல், நேற்று முன்தினம், வில்லிவாக்கம் ராஜா தெருவைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் சரத்குமார், 39, என்பவரை, செங்குன்றம் - வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே, பைக்கில் வந்த ஒரு கும்பல் கத்தியால் வெட்டி படுகொலை செய்தது.
இச்சம்பவத்தில் தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, இக்குற்ற செயலில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார், 23, யோகேஸ்வரன், 23, பெஞ்சமின், 23, உத்திரகுமார், 22, மற்றும் சூளையைச் சேர்ந்த பிரசாத், 23, ஆகிய ஐவரை, போலீசார் கைது செய்தனர்.
ரகளை ரவுடிகள்
மாதவரம் பால்பண்ணை அடுத்த மாத்துார், எம்.எம்.டி.ஏ., மூன்றாவது தெருவில், நேற்று முன்தினம் அதிகாலை, 'பல்சர், யமஹா' உள்ளிட்ட, மூன்று இருசக்கர வாகனங்களில், கஞ்சா, மது போதையில் வந்த ஆறு பேர், அங்கிருந்த வீடு, ஜன்னல், ஆட்டோக்களை அடித்து சேதப்படுத்தினர்.
அவர்கள், பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டையுடன் ஆவேசமாக கூச்சலிட்டபடி, அட்டகாசம் செய்ததால், பதறி கண் விழித்த குடியிருப்புவாசிகள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். மாதவரம் பால்பண்ணை போலீசார், அங்கு செல்வதற்குள், ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், மாத்துாரைச் சேர்ந்த சிவகுமார், 21, அஜித், 21, ராகுல், 21, திருமால், 21, லாரன்ஸ், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை, நேற்று முன்தினம் இரவே கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக, தங்களது எதிரிகளை தாக்குவதற்காக அவர்கள் வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடரும் அட்டகாசம்
இந்நிலையில், நேற்றும், போதை கும்பலின் அடிதடியில் தலையிட்டு, உடனடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவுடி 'பாம்' முரளி, 22. புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
இவர், தன் கூட்டாளிகளான எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த முகேஷ், 23, தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு விக்கி, 22, புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் சஞ்சய், 19, ஆகியோருடன், அப்பகுதி ஏ.ஏ.திட்ட சாலையில் நேற்று மது குடித்தனர்.
அங்கு, மற்றொரு ரவுடி கும்பலை சேர்ந்த மனோஜ், ஆனந்தன் ஆகியோரும், மது அருந்தி கொண்டிருந்தனர். இரு தரப்பினருக்கும் போதை அதிகமானதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
மனோஜ் தரப்பினர், 'பாம்' முரளியை கட்டையால் தாக்கினர். 'பாம்' முரளி கத்தியால் வெட்டியதில், மனோஜ் படுகாயமடைந்தார். அப்பகுதியினர் சண்டையை விலக்கிவிட்டு, மனோஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை போலீசார் உடனடியாக வழக்கு பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட, ரவுடி 'பாம்' முரளி, அவரது கூட்டாளிகளான விக்கி, சஞ்சய், முகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
குடிபோதை மோதல்
திருமங்கலம், திருவள்ளீஸ்வரர் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் 25. இவர், கடந்த 28ம் தேதி இரவு நண்பர் ராஜேஷ் என்பவருடன் அயனாவரம் வாட்டர் டேங்க் சாலையில் பைக்கில் சென்றார்.
அப்போது, எதிரே ஒரு வழி பாதையில், ஒரே பைக்கில் வந்த மூவர், தினேஷ்குமாரின் வாகனத்தின் மீது நேருக்கு நேர் லேசாக மோதினர். இதில், இரு தரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த மூவரும், தினேஷ் குமாரை தாக்கிவிட்டு தப்பினர்.
இதுகுறித்து, அயனாவரம் போலீசார் விசாரித்து, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த திருமலை, 19, மகேஷ்,19, ஜனார்த்தனன், 19, ஆகிய மூவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- நமது நிருபர் -