/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பால ரயில் நிலையங்களை மேம்படுத்த... திட்டம் தயார்!
/
மேம்பால ரயில் நிலையங்களை மேம்படுத்த... திட்டம் தயார்!
மேம்பால ரயில் நிலையங்களை மேம்படுத்த... திட்டம் தயார்!
மேம்பால ரயில் நிலையங்களை மேம்படுத்த... திட்டம் தயார்!
UPDATED : ஜூன் 09, 2024 06:45 AM
ADDED : ஜூன் 09, 2024 01:31 AM

சென்னை:வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மேம்பால ரயில் சேவையை, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த பாதையில் 'ஏசி' ரயில்களை இயக்கவும், மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல் மேம்பால ரயில் நிலையங்களை மாற்றவும் விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாரிக்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 'மேம்பால ரயில் திட்டம்' கொண்டு வரப்பட்டது. தெற்கு ரயில்வேயுடன் இணைந்து, முதல்கட்டமாக சென்னை கடற்கரை -- மயிலாப்பூர் இடையே ரயில் திட்ட பணிகள் முடிக்கப்பட்டன.
இரண்டாவது கட்டமாக, மயிலாப்பூர் -- வேளச்சேரி இடையேயான ரயில் திட்ட பணிகள், கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டன. தற்போது, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வரை, தினமும் 100 சர்வீஸ் மேம்பால மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வேளச்சேரி - பரங்கிமலையை இணைக்கும் மேம்பால ரயில் திட்ட பணிகள், பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் துவங்கி நடைபெற்றன. இதற்கிடையே, கடந்த ஜன., மாதத்தில், தில்லைகங்கா நகர் பகுதியில் பணி நடக்கும் போது, பாலம் சாய்ந்தது.
இதனால், மூன்று மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, சரிந்து விழுந்த பாலத்தை அகற்றும் பணிகளும், திட்டத்தை முடிப்பதற்கான பணிகளும் துவங்கி உள்ளன.
மேம்பால ரயில் தடத்தில் உள்ள நிலையங்கள், வணிக நோக்கத்துடன் பெரிய பெரிய கட்டடங்களாக அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மத்திய ரயில்வே துறை நிர்ணயித்த வாடகை மற்றும் 'லீஸ்' தொகை அதிகம் எனக் கருதியதால், அவற்றை வாடகைக்கு எடுக்க வியாபாரிகள் உள்ளிட்டோர் முன்வரவில்லை.
இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன், வேளச்சேரி மேம்பால ரயில் பாதையை, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், புறநகர் மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், மேம்பால ரயில் நிலையம் ஆகியவை இணையும் முக்கிய மையமாக, பரங்கிமலை ரயில் நிலையம் உருவாகிறது. இங்குள்ள மின்சார ரயில் நிலையத்தில், 14.5 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, மேம்பால ரயில் நிலையங்களை, மெட்ரோ ரயில் நிலையங்களைப் போல் மேம்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
வேளச்சேரி மேம்பால ரயில் சேவையை, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சமீபத்தில், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட மேம்பால ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், ஒவ்வொரு ரயில் நிலையங்களுக்கும் ஆகும் செலவு, என்னென்ன வசதிகள் கொண்டு வருவது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
மேம்பால ரயில் பாதைகள் 'பிராட்கேஜ்' ரயில் பாதை என்பதால், மெட்ரோ ரயில்களை இயக்க முடியாது. ஆனால், ரயில்வே சார்பில் மும்பையில் இயக்கப்படும், 'ஏசி' மின்சார ரயில்களை போல், இந்த தடத்திலும் இயக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினர்.