/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள் அகற்றம் நல்ல முடிவு! மாநகராட்சியுடன் கைகோர்த்து போலீஸ் நடவடிக்கை
/
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள் அகற்றம் நல்ல முடிவு! மாநகராட்சியுடன் கைகோர்த்து போலீஸ் நடவடிக்கை
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள் அகற்றம் நல்ல முடிவு! மாநகராட்சியுடன் கைகோர்த்து போலீஸ் நடவடிக்கை
விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள் அகற்றம் நல்ல முடிவு! மாநகராட்சியுடன் கைகோர்த்து போலீஸ் நடவடிக்கை
ADDED : மே 23, 2024 11:57 PM

சென்னையில் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்படும் சேதங்களை தவிர்க்கவும், வேகத்தடைகளை அகற்றும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை, வட்டார போக்குவரத்து மற்றும் போலீசார் இணைந்து, இதற்கான பணிகளில் கைகோர்த்துள்ளனர்.
சென்னையில் பள்ளி, கல்லுாரி, மருத்துவமனைகள், கோவில்கள், சந்தை பகுதிகள் மற்றும் மும்முனை சாலை சந்திப்புகளில், வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் ஏதுவாக, வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
பல இடங்களில் மிக உயரமாகவும், தொடர்ச்சியாகவும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
விதிமீறல்
தவிர, அனுமதியில்லாத இடங்களில் வேகத்தடைகள் அமைப்பது, அவற்றின் மீது வண்ணம் பூசாதது, வேகத்தடை குறித்து முன்னெச்சரிக்கை பலகை அமைக்காதது உள்ளிட்ட விதிமீறலால், தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
அதேபோல், வேகத்தடைகளின் உயரத்தை அதிகப்படுத்தி அமைப்பதால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் 'சேஸ்' மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் எடுத்துச் செல்லும் குழாய்கள் சேதமடைவதாகவும் புகார் எழுந்தது.
கடந்த 2016ல் மார்ச் மாதம் பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின், பட்டினப்பாக்கம் டி.ஜி.எஸ்., தினகரன் சாலையில் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காரில் சென்றார்.
அப்போது, திடீரென ஒரு வேகத்தடையில் மோதி கார் துாக்கி வீசப்பட்டது. இதில் கார் தீப்பிடித்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சிட்லப்பாக்கம் பகுதியில் விதிமுறையின்படி அமைக்கப்படாத வேகத்தடையால், இருசக்கர வாகனத்தில் சென்ற கொத்தனார் கோவிந்தராஜ், 40, மகன்கள் கண்முன்னே, மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்குன்றம் பாண்டேஸ்வரம் சாலையில், வேகத்தடை இருப்பது தெரியாமல், இரு நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கி, கருணாகரன், 35, என்பவர் உயிரிழந்தார்.
இதுபோன்று உயிரிழப்பு ஏற்படுவதற்கும் வேகத்தடை காரணமாக இருப்பதால், அதை தடுக்கும் விதமாக, போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர்.
இதில், இந்திய சாலைகள் குழுமம் எனும் ஐ.ஆர்.சி., வகுத்துள்ள விதிமுறையின்படி வேகத்தடைகளை அமைக்காததே, விபத்துகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என தெரிந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், சென்னை நகர் முழுதும் ஐ.ஆர்.சி., விதிமுறையை மீறி அமைக்கப்பட்ட வேகத்தடைகளை கண்டறிய உத்தரவிட்டு உள்ளார்.
வரும் காலங்களில் புதிதாக அமைக்கப்படும் வேகத்தடைகளை, ஐ.ஆர்.சி., விதிமுறையின்படி அமைக்க வேண்டும் என, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கடிதம் அனுப்பிஉள்ளார்.
புகார்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சென்னையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றால், அருகே உள்ள காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இந்த நடைமுறையை யாரும் பின்பற்றுவதில்லை.
மாறாக சம்பந்தப்பட்ட பகுதி அரசியல் பிரமுகர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையினரை வைத்து, வேகத்தடை அமைத்துக் கொள்கின்றனர்.
சாலைகளில் வேகத்தடை அமைப்பதற்கென, ஐ.ஆர்.சி., விதிமுறைகளை உருவாக்கி உள்ளது.
சாலைகளில் வேகத்தடை அமைக்கும் போது, 10 செ.மீ., உயரம் உடையதாகவும், 3.7 மீட்டர் அகலம் உடையதாகவும் இருக்க வேண்டும். மேலும் அவற்றில், கருப்பு வெள்ளை வண்ணம் பூசி இருக்க வேண்டும்.
வேகத்தடை அமைக்கப்பட்டு இருப்பதை வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் விதமாக, 40 மீட்டர் முன் அறிவிப்பு பதாகையை அமைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை.
இந்த விதிமுறையை பின்பற்றாமலேயே கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ்., தினகரன் சாலை, என்.எஸ்.சி., போஸ் சாலை, பேசின் சாலை, அருணாச்சலம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதுபோல், சென்னை முழுதும் ஆய்வு நடத்தி, தேவையற்ற வேகத்தடைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாற்றி அமைப்பு
சென்னை நகரில் வேகத்தடைகளால் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகள், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டிய பகுதிகளில் உள்ள வேகத் தடைகள் குறித்து, அறிக்கை தயாரிக்கிறோம். இதற்காக, நெடுஞ்சாலை, மாநகராட்சி, வட்டார போக்குவரத்தின ருடன் போலீசார் இணைந்துள்ளோம். விபத்து ஏற்படும் வேகத்தடையை அகற்றவும், சில இடங்களில் அவற்றை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- போலீஸ் உயர் அதிகாரி
உத்தரவு பிறப்பிப்பு
சென்னையில் பல சாலைகளில் ஐ.ஆர்.சி., விதிமுறைப்படி வேகத்தடை அமைக்கவில்லை. அவற்றை, மாநகராட்சியின் பேருந்து சாலை துறையினர் முழுமையாக அகற்றி, விதிப்படி புதிதாக வேகத்தடை அமைக்க உள்ளனர். இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், செயற்பொறியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில், புதிதாக வேகத்தடை அமைக்கும் போது, ஐ.ஆர்.சி., விதிமுறையை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாநகராட்சி செயற்பொறியாளர்
சீரான போக்குவரத்து
சீரான போக்குவரத்து இருக்கும் வகையிலான நடவடிக்கையை, நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, வால்டாக்ஸ் உள்ளிட்ட சாலைகளில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. தவிர, புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளில் வேகத்தடை அமைக்கக் கூடாது என உத்தரவு உள்ளது.
- ரவி,
கோட்டப் பொறியாளர், சென்னை நகர சாலைகள் பிரிவு
- நமது நிருபர் -