/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒக்கியம் மடுவில் கொட்டிய மண் வரும் 22க்குள் அள்ள கெடு
/
ஒக்கியம் மடுவில் கொட்டிய மண் வரும் 22க்குள் அள்ள கெடு
ஒக்கியம் மடுவில் கொட்டிய மண் வரும் 22க்குள் அள்ள கெடு
ஒக்கியம் மடுவில் கொட்டிய மண் வரும் 22க்குள் அள்ள கெடு
ADDED : ஆக 09, 2024 12:11 AM
துரைப்பாக்கம், தென் சென்னை புறநகர் பகுதியில் உள்ள 62 ஏரிகள், 100க்கும் மேற்பட்ட குளங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர், 400 அடி அகல ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் கலக்கிறது.
ஒக்கியம் மடு, துரைப்பாக்கம் அருகே, ஓ.எம்.ஆர்., என்ற பழைய மாமல்லபுரம் சாலையின் குறுக்கே செல்கிறது.
'மிக்ஜாம்' புயல் மழையில், ஒக்கியம் மடுவில் ஆகாயத்தாமரை சேர்ந்து, நீரோட்டம் தடைபட்டதால், வேளச்சேரி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அப்போது, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒக்கியம்மடுவை ஆய்வு செய்தனர். அப்போது, 'தற்போது 250 அடி அகலத்தில் இருக்கும் ஒக்கியம் மடுவை விரிவாக்கம் செய்தால் மட்டுமே, வெள்ள பாதிப்பை தடுக்க முடியும்' என்றனர்.
இதையடுத்து, மடு விரிவாக்கத்திற்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணிக்காக, சாலை மைய பகுதியில் துாண்கள் அமைக்கப்படுகின்றன.
ஒக்கியம்மடு இருக்கும் சாலை மைய பகுதியில் துாண்கள் அமைக்க முடியாததால், மடுவுக்குள் 'ப' வடிவில் துாண்கள் அமைத்து, ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, ஒக்கியம் மடுவின் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் மண் கொட்டி நிரப்பி பணி நடந்து வருகிறது.
இதனால், 250 அடி அகலத்தில், 200 அடி மண் கொட்டியது போக, 50 அடி அகலத்தில் தான் தண்ணீர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த குறுகிய பாதையில் தான், வெள்ளம் செல்கிறது.
வடகிழக்கு பருவமழை, அக்., மாதம் துவங்கும் என கருதிய அதிகாரிகள், செப்., மாதத்திற்குள் மடு விரிவாக்க பணியை முடிக்க வேண்டும் என, நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கூறியது.
தற்போது, எதிர்பாராத மழை பெய்வதால், ஒக்கியம் மடுவில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், இப்பணிகளை பார்வையிட்ட அதிகாரிகள், விரிவாக்க பணிக்கு இடையூறாகவும், தண்ணீர் செல்வதற்கு தடையாகவும் மடுவில் கொட்டப்பட்டுள்ள மண்ணை, உடனடியாக அகற்ற வேண்டும் என, மெட்ரோ நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.
இது குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இரவில் எதிர்பாராத மழை பெய்வதால், வடிகால், கால்வாயில் நீரோட்டம் அதிகரிக்கிறது. அனைத்து மழைநீரும், ஒக்கியம் மடு வழியாக செல்வதால், வரும் 22ம் தேதிக்குள், அங்கு கொட்டிய மண்ணை அகற்ற வேண்டும் என, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்.
மேலும், மடுவில் தேங்கும் ஆகாயத்தாமரை, குப்பையை அகற்ற உள்ளோம். கனமழை பெய்தாலும் நீரோட்டத்திற்கு தடை ஏற்படாத வகையில், தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.