/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தெருவிளக்கு வரும்... ஆனா வராது! கைவிரிக்கும் திருவொற்றியூர் அதிகாரிகள்
/
தெருவிளக்கு வரும்... ஆனா வராது! கைவிரிக்கும் திருவொற்றியூர் அதிகாரிகள்
தெருவிளக்கு வரும்... ஆனா வராது! கைவிரிக்கும் திருவொற்றியூர் அதிகாரிகள்
தெருவிளக்கு வரும்... ஆனா வராது! கைவிரிக்கும் திருவொற்றியூர் அதிகாரிகள்
ADDED : ஆக 24, 2024 12:10 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தலைவர் தனியரசு தலைமையில் நேற்று நடந்தது. இதில், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், 64 தீர்மானங்கள் நிறைவேறின. தீர்மானங்கள் குறித்தும், வார்டின் பிரச்னைகள் குறித்தும் கவுன்சிலர்கள் பேசினர்.
ஜெயராமன், 4வது வார்டு மார்க்.கம்யூ., கவுன்சிலர்: பல தெருவிளக்கு கம்பங்கள் பழுதாகி விட்டன. புகார் தெரிவித்தால், போதிய உபகரணங்கள் இல்லை என கூறுகின்றனர். ராமநாதபுரத்தில் தெருவிளக்கு பிரச்னை குறித்து இரு வாரமாக தெரிவிக்கிறேன். நடவடிக்கை ஏதுமில்லை.
சண்முகபுரம் - ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில், குடிநீர் பிரச்னை அதிகம் உள்ளது. சரி செய்ய வேண்டும்.
சாமுவேல் திரவியம், 6வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்: எனக்கு வார்டு அலுவலகம் கிடையாது. கலைஞர் நகர், சக்தி கணபதி நகர், ராஜா சண்முகம் நகரில், குடிநீர் வினியோகத்தில் பெரும் பிரச்னை உள்ளது. இதனால், பகுதிவாசிகள் போராட தயாராகி வருகின்றனர்.
சொக்கலிங்கம், 5 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் இணைப்பு அவசியம். சுடுகாடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
எனவே 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும். தெருவிளக்குகள், வரும் ஆனா வராது என்பது போல் அதிகாரிகளின் பதில் உள்ளது.
சரண்யா, 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: பாதாள சாக்கடைக்கு புதிய குழாய்கள் அமைக்க, இரண்டு ஆண்டுகளாக கோரி வருகிறேன். எந்த நடவடிக்கையும் கிடையாது. குடிநீர் பிரச்னை அதிகம் உள்ளது.
பானுமதி, 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: குடிநீர் வினியோகம் சீராக இல்லை. கழிவுநீர் கலந்து வருகிறது. குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. திருச்சிணாங்குப்பம் கழிப்பறையில், மின்மோட்டார் கிடையாது. அடிபம்புகள் போட்டு தர வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொட்டியில் அடைப்புகளை நீக்க வேண்டும்.
இது குறித்து, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு பேசியதாவது:
குடிநீர் கலங்கலாக வருவது குறித்து தொடர் புகார்கள் வருகின்றன. மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது, சில பிரச்னைகளால், புழல் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகிப்பதாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். குடிநீர் பிரச்னைக்கு, கவுன்சிலர்கள் இரு தினங்களில் மேலாண் இயக்குனரை சந்திக்கலாம்.
தெருவிளக்குகள் சம்பந்தமாகவும் புகார்கள் அதிகம் வருகின்றன. ஆனால், மின் பிரிவு அதிகாரிகள் வேலை செய்வதாக தெரியவில்லை. உடனடியாக கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகாரின் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.