/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாப்பிடுவதற்கு தகுதியற்ற சம்பா ரவை சந்தையில் அமோக விற்பனை ரசாயனம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தகவல்
/
சாப்பிடுவதற்கு தகுதியற்ற சம்பா ரவை சந்தையில் அமோக விற்பனை ரசாயனம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தகவல்
சாப்பிடுவதற்கு தகுதியற்ற சம்பா ரவை சந்தையில் அமோக விற்பனை ரசாயனம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தகவல்
சாப்பிடுவதற்கு தகுதியற்ற சம்பா ரவை சந்தையில் அமோக விற்பனை ரசாயனம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தகவல்
ADDED : ஜூலை 26, 2024 01:35 AM

சம்பா ரவை மற்றும் அரிசி மாவுகளில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட 6 மடங்கு அதிகமாக ரசாயனம் இருப்பதாக ஆய்வில் தெரிந்த பின்பும், சந்தையில் தடை செய்யாமலிருக்க பேரம் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள மக்களின் உணவுகளில், சமீபகாலமாக சம்பா ரவை முக்கிய இடம் பிடித்துள்ளது. அதனால் இதன் விற்பனை அதிகரித்துள்ளது; கோவையில் இதைத் தயாரிக்கும் நிறுவனங்களும் அதிகமாகியுள்ளன.
பரிசோதனை
கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், இங்கு தயாராகும்பாக்கெட் சம்பாரவையை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்து உள்ளனர்.
அதில், அந்த சம்பா ரவையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதித்த அளவைவிட, ஆறு மடங்கு அதிகமாக இருந்துள்ளது.
உணவுப் பொருட்கள் கெடாமலிருக்கப் பயன்படுத்தும் ரசாயனமான 'குளோர்பிரிபோஸ்' (Chlorpyrifos) அனுமதிக்கப்பட்ட அளவான 0.01 மி.கி., என்பதற்குப் பதிலாக 0.0604 என்ற அளவுக்கு, ஆறு மடங்கு அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அளவில் அந்த ரசாயனம் இருப்பது, உண்பதற்குத் தகுதியற்றது (UNSAFE) என்று, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
கோவையில் தயாராகும்எட்டு பிராண்ட்களின் சம்பா ரவைகளிலும், குறிப்பிட்ட சில பிராண்ட்களின் அரிசி மாவிலும் இந்த அளவுக்கு ரசாயனம் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய உணவு, நுரையீரலைக் கடுமையாக பாதிக்கும்; குழந்தைகளுக்கு மிக ஆபத்தாக இருக்கும் என்றும் மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சம்பா ரவையில் பூச்சிக்கொல்லி அதிகமிருப்பதைக் கண்டறிந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் இவற்றைத் திருப்பி அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வர்த்தகர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:
சில முக்கியமான பிராண்ட்களின் பாக்கெட் சம்பா ரவை மற்றும் அரிசி மாவுகளில், அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி இருப்பதாகக்கண்டறியப்பட்டது உண்மைதான்.
இதற்கு பஞ்சாப்பில் விளையும் சம்பா கோதுமையில் அளவுக்கு அதிகமாகத் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிதான் காரணமென்று, அந்த நிறுவனங்கள் தரப்பில் வாதம் முன் வைக்கப்படுகிறது.
ஆனால், அதே இடங்களில் சம்பா கோதுமை வாங்கும் வேறு சில நிறுவனங்கள் தயாரிக்கும் சம்பா ரவைகளை, ஆய்வகத்தில் பரிசோதித்த போது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பூச்சிக்கொல்லி இருப்பதும் உறுதியாகியுள்ளது.
சம்பா கோதுமையை ஏழெட்டு மணி நேரம் ஊற வைத்து, அதற்குப் பின்பே உடைப்பது வழக்கம்.
அவ்வாறு ஊற வைக்கப்படும் தண்ணீரில்தான் இந்த பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, மூன்று மாதங்களில் பூச்சி வந்து விடும் உணவு, இரண்டு ஆண்டுகள் வரையிலும் கெடாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதே, இவற்றைப் பயன்படுத்தக் காரணமாகும்.
பல நாடுகள் இந்த பூச்சிக்கொல்லியை 20 ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்து விட்டன.
இந்தியாவிலும் கடந்த 2022ல் இது தடை செய்யப்பட்டு விட்டது. அதையும் மீறி இதைப் பயன்படுத்துகின்றனர். இதைத் தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், பேரம் பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மத்திய அரசு உணவுப் பொருள் கலப்படம் குறித்த சில 'பாராமீட்டர்'களை நிர்ணயித்துள்ளது. ஆபத்தான உணவை விற்கும் சில நிறுவனங்கள், இப்போது இந்த அளவீடுகளை மாற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளன.
இவ்வாறு வர்த்தகர்கள் சிலர் தகவல் பகிர்ந்தனர்.
தவறான முடிவு
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, ''சில நிறுவனங்களின் சம்பா ரவையை நாங்கள் ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, 'குளோர்பிரிபோஸ்' அதிகமிருப்பதாக முடிவு வந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், அது தவறான முடிவு என்கின்றனர்.
''அவர்கள் அப்பீல் செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது. அப்படிச் செய்தால், அது மற்றுமோர் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அப்போதும் அதே அளவு வந்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். '' என்றார்
- நமது சிறப்பு நிருபர் -