/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு வாரிய துறைகள் ரூ.6 கோடி வரி பாக்கி
/
இரு வாரிய துறைகள் ரூ.6 கோடி வரி பாக்கி
ADDED : ஜூலை 14, 2024 12:23 AM
சோழிங்கநல்லுார், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதிகளை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன.
இந்த மண்டலத்தில், 60,000 சொத்து உரிமையாளர்களிடம் இருந்து, ஆண்டுதோறும் 52 கோடி ரூபாய் வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலான கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஐ.டி., நிறுவனங்களாக உள்ளதால், இந்த மண்டலம், வரி வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆனால், கண்ணகி நகர், செம்மஞ்சேரி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 6 கோடி ரூபாய் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில், 2 கோடி ரூபாய் வீட்டு வரி நிலுவை உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் உள்ள, 30,468 வீடுகள், வீட்டுவசதி வாரியத்தில், 700க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, பல ஆண்டுகளாக வீட்டு வரி செலுத்தவில்லை.
ஆனால், சாலை, பூங்கா, தெருவிளக்கு, துாய்மை, சுகாதார பணி, குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட பணிகளை தடையின்றி வழங்குகிறோம். இங்கு, சதுர அடிக்கு 40 முதல் 90 பைசா வீதம் தான் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வீட்டு வரி நிலுவை இல்லாமல் செலுத்தினால் தான், மேலும் பல திட்டங்கள் செயல்படுத்த முடியும். இதற்கு, இரண்டு வாரிய துறைகளும் வீட்டு வரி செலுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.