/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
யானைக்கவுனி மேம்பால பணி ஜூலையில் முடிக்க தீவிரம்
/
யானைக்கவுனி மேம்பால பணி ஜூலையில் முடிக்க தீவிரம்
ADDED : ஜூன் 27, 2024 12:34 AM
யானைக்கவுனி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் வால்டாக்ஸ் சாலையில், பழமையான யானைக்கவுனி மேம்பாலம் உள்ளது. 1933ல் ஆங்கிலேயர் காலத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
பழமையான இந்த மேம்பாலம், சிதிலமடைந்து வலுவிழந்தது. பெரும் விபத்து அசம்பாவிதங்களை தவிர்க்க கனரக, இலகுரக வாகன போக்குவரத்திற்கு தடை விதித்து, கடந்த 2016ல் பாலம் மூடப்பட்டது.
இதையடுத்து, தெற்கு ரயில்வே துறையின் 49 கோடி ரூபாய், சென்னை மாநகராட்சியின் 30.78 கோடி ரூபாய் என, 79.78 கோடி ரூபாய் நிதியில், புதிய மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, 2020ல் ஊரடங்கு அமலில் இருந்ததை பயன்படுத்தி, தெற்கு ரயில்வே, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, பழமையான பாலத்தை இடித்து அகற்றினர்.
பின், 2020 ஆகஸ்டில், 520 மீட்டர் துாரம், 20.1 மீட்டர் அகலத்தில் புதிய மேம்பால பணிகள் துவங்கின. ரயில்வே போக்குவரத்திற்கு இந்த தடம் முக்கியமானது என்பதால், சேவை பாதிக்கப்படாத வகையில், பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், கட்டுமான பணிகள் முடிந்து எட்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த மார்ச் 15ம் தேதி, யானைக்கவுனி மேம்பாலத்தின் ஒருவழி பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
யானைக்கவுனி மேம்பாலத்தில் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ராஜா முத்தையா சாலையை நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை பணி, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மற்றொரு வழிப்பாதைக்கான பணி விரைந்து நடந்து வருகிறது.
தற்போது மேம்பாலத்தில் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளதாகவும், ஜூலை முதல் வாரத்தில் பணிகள் அனைத்தும் முடியும் எனவும், மேம்பால துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.