/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரு.வி.க.நகரில் அடிப்படை வசதிகள் இல்லை ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் போட்டி போட்டு புகார்
/
திரு.வி.க.நகரில் அடிப்படை வசதிகள் இல்லை ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் போட்டி போட்டு புகார்
திரு.வி.க.நகரில் அடிப்படை வசதிகள் இல்லை ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் போட்டி போட்டு புகார்
திரு.வி.க.நகரில் அடிப்படை வசதிகள் இல்லை ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் போட்டி போட்டு புகார்
ADDED : ஆக 21, 2024 12:33 AM
திரு.வி.க.நகர், சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டல குழு கூட்டம், ஓட்டேரியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மண்டல அதிகாரி முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக திரு.வி.க.நகர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., தாயகம் கவி பங்கேற்றார். கூட்டத்தில் 146 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலு 78வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்பகுதியில் நெரிசல் இருந்து கொண்டே உள்ளது.
சென்னையிலேயே முதல் முறையாக என் வார்டில் தான் மகளிருக்கான உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. அதை அப்போது மேயராக இருந்த தற்போதைய முதல்வர் தான் திறந்து வைத்தார்.
தற்போது அது பயனற்று உள்ளது. சூளை தட்டான்குளம் பகுதியில் கால்வாய் மீது உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு தாசில்தார் அலுவலக அதிகாரிகள் பட்டா தருவதாக பொய்யாக கூறி கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
இது முற்றிலும் தவறு. என் வார்டில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் முடியவில்லை. எப்போது கேட்டாலும் நடந்து கொண்டிருக்கிறது என்ற பதில் மட்டுமே வருகிறது. வேலை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யோகப்பிரியா 66வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: சமீபத்தில், முதல்வர் திறந்து வைத்த ஆரம்ப சுகாதார நிலையம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து கேட்டால், மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்கின்றனர்.
சட்டவிரோத செயல்களை தடுக்க, சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பூங்காக்களில் 'சிசிடிவி' எனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
நாகராஜன், 64வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: தசரதபுரம் பிரதான சாலை, தில்லை நகர் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சரவணன் 72வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: மழை நீர் வடிகால் பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் இன்னும் நடைபெறாமல் உள்ளன. ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். ஓட்டேரி பகுதியில் உள்ள கால்வாய்களை துார்வார வேண்டும். ஆட்டிறைச்சி கூடத்தை நவீனப்படுத்த வேண்டும்.
தமிழ்செல்வி 76வது வார்டு கவுன்சிலர்: என் வார்டில் உள்ள மாநகராட்சி பள்ளி கட்டடம் 50 ஆண்டு பழமை வாய்ந்தது அதை இடித்து விட்டு புதிதாக கட்டடம் கட்டித்தர வேண்டும். மேலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் இல்லை. போதிய இடவசதி உள்ளது. எங்கள் பகுதி பிள்ளைகளுக்கு மேற்படிப்பு இங்கேயே படிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.
தாவூத் பீ 67வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: திரு.வி.க., நகர் மீன் மார்க்கெட் பகுதியில் குப்பை எந்நேரமும் உள்ளது. மற்ற பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து குப்பையை கொட்டுகின்றனர். மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.
ஸ்ரீதனி 70வது வார்டு கவுன்சிலர்: அயனாவரம், பிரிக்ளின் ரோடு, வசந்தம் கார்டன் பகுதியில் இரவு நேரத்தில் மின்வெட்டு தொடர்கதையாக உள்ளது. இரவு 2:00 மணிக்கு கூட பொதுமக்கள் என்னை எழுப்பி புகார் கூறுகின்றனர். மின் வாரியத்தில் இதுப்பற்றி பல முறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.
பூங்கா சூப்பர்வைசர் எந்த வேலையும் செய்வதில்லை. வார்டில் குடிநீர் குழாய் பழுதாகிவிட்டது. பல இடங்களில் குடிநீர் சுகாதாரமாக வினியோகமாகவில்லை. வேறு குழாய் மாற்ற வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் போட்டி போட்டு புகார் அளித்தனர்.
பின், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் பேசுகையில், ''சில துறை அதிகாரிகள் மண்டல குழு கூட்டத்திற்கு வருவதே இல்லை.
மக்கள் பிரச்னைகளை பேசவே வார்டு குழு கூட்டம் நடக்கிறது. இங்கு வந்து கேட்டால் தான் என்ன பிரச்னை என்பது தெரியும். மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து, அனைத்து அதிகாரிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்,'' என்றார்.