/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வளர்ச்சி கிடையாது கவர்ச்சி மட்டுமே தி.மு.க.,வை சாடும் பா.ஜ., வினோஜ்
/
வளர்ச்சி கிடையாது கவர்ச்சி மட்டுமே தி.மு.க.,வை சாடும் பா.ஜ., வினோஜ்
வளர்ச்சி கிடையாது கவர்ச்சி மட்டுமே தி.மு.க.,வை சாடும் பா.ஜ., வினோஜ்
வளர்ச்சி கிடையாது கவர்ச்சி மட்டுமே தி.மு.க.,வை சாடும் பா.ஜ., வினோஜ்
ADDED : ஏப் 14, 2024 01:04 AM

சென்னை:மத்திய சென்னையில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வினோஜ், வில்லிவாக்கம் அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில், தாமரை சின்னத்திற்கு நேற்று ஓட்டு சேகரித்தார். அயனாவரத்தில், வேட்பாளருக்கு அக்கட்சியினர் சார்பாக, வீர வாள் வழங்கப்பட்டது.
அப்போது, வினோஜ் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரு மாற்றமும், நல்லாட்சியும் கிடைக்காதா என, மக்கள் ஏங்கியுள்ளனர். தயாநிதி போன்ற பொழுதுபோக்குக்காக அரசியல் செய்வோர் வேண்டாம் என, அவர்கள் நினைக்கின்றனர்.
தேர்தலில், மத்திய சென்னையில் பா.ஜ., நிச்சயம் முதலிடத்தை பிடிக்கும். தற்போது தி.மு.க.,வுக்கும் அ.தி.மு.க.,வுக்கும் இடையே, இரண்டாம் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
தொடர்ச்சியாக இதே பகுதியில் பலமுறை வெற்றி பெற்ற தயாநிதி தான் எனக்கு, பிளஸ் பாயின்ட். இத்தனை ஆண்டுகள் வெற்றி பெற்றும், தொகுதிக்கு எவ்வித மேம்பாட்டு பணியும் நடக்கவில்லை.
மிக மோசமாக வளர்ச்சி அடைந்த தொகுதி என்றால் மத்திய சென்னை மட்டுமே. தி.மு.க., குடும்பத்திற்காக தாரை வார்த்து கொடுத்த தொகுதியாக மத்திய சென்னை மாறி உள்ளது.
இந்த தேர்தலை அடுத்து, மத்திய சென்னை பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார் தயாநிதி; அந்த அளவிற்கு, தேர்தலில் அவருக்கு தோல்வி நிச்சயம்.
மத்திய சென்னையில் வெற்றி பெற்றால், போக்குவரத்து நெரிசலை குறைத்து தொகுதியில் மேம்பாட்டுப் பணியை செய்வேன். சமுதாயத்தை சீரமைத்து, போதையில் சிக்கி உள்ள இளைஞர்களை நிச்சயம் மீட்பேன். மத்திய சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவேன்.
மக்களை ஏழ்மை நிலையில் வைத்திருப்பது தான், தி.மு.க., ஆட்சியின் சாதனை. மக்களுக்கான ஓட்டு, காசுக்கு விலை போகும் நிலைக்கு உண்டாக்கியது தி.மு.க., மட்டுமே.
மத்திய அரசு பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்காக நிதியை வழங்குகிறது. அவற்றை மாநில அரசு சரியாக திட்டமிடாமல் பயன்படுத்தாமல் அலட்சியம் காட்டுகிறது.
மழை வெள்ளத்தின்போது பா.ஜ., தான் மக்களுக்கு முதலில் உதவி செய்தது. மற்ற மாநிலங்களைவிட தமிழகம், அதிக கடன் சுமையில் உள்ளது.
உலகிலேயே பொய்யில் ஆட்சி செய்யும் தி.மு.க.,வைப் போன்ற கட்சியே கிடையாது. பா.ஜ., மீது வன்மத்தை ஏற்படுத்தி, சிறுபான்மையின மக்களை ஏமாற்றுகின்றனர்.
பெரியமேடு, திருவல்லிக்கேணி பகுதி முஸ்லிம்கள், பா.ஜ.,விற்கு பெரும் வரவேற்பு அளித்தனர். கடினமான தொகுதி என தெரிந்தே, களத்தில் இறங்கி உள்ளேன்.
கடந்த 2019 மோடி மீது எதிர்ப்பு அலைகளை துாண்டிவிட்டனர். தற்போது மோடி மீது ஆதரவு அலைகளை பார்க்கிறோம். இதற்கு மோடியின் 'ரோடு ஷோ'வே ஆதாரம்.
பா.ஜ.,வில் பதவிக்காக ஆசைப்படுவோர் கிடையாது; மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் பணியாற்றுகிறோம்.
தமிழகத்தில் தி.மு.க., இருக்கிற வரை, வளர்ச்சி பாதையில் செல்ல வாய்ப்பு கிடையாது. திராவிட மாடல் வளர்ச்சி கிடையாது கவர்ச்சி மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.

