/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபாய சங்கிலி இழுத்த நபரை தேடிய போலீசால் சலசலப்பு
/
அபாய சங்கிலி இழுத்த நபரை தேடிய போலீசால் சலசலப்பு
ADDED : மே 04, 2024 12:21 AM
தி.நகர். சென்னை கடற்கரையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில், மாம்பலம் நிலையத்தில் நின்றது.
அப்போது, குழந்தையுடன் தாய் ஒருவர் ரயிலில் ஏற முயற்சித்தார். குழந்தை ஏறியவுடன் ரயில் புறப்பட்டது. இதனால், செய்வதறியாமல் அப்பெண் கதறி அழுதார்.
உடனே, உள்ளே இருந்த நபர் ஒருவர், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார்.
அந்த பெண், உடனே ரயிலில் ஏறி குழந்தையை மீட்டார். ஆனால், ரயில் அங்கிருந்து புறப்படவில்லை. சம்பவ இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், போலீசார் விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். இதைப் பார்த்ததும், அபாய சங்கிலியை இழுத்தவர், குடும்பத்தினருடன் ரயிலில் இருந்து இறங்கி நழுவினார்.
இதை பார்த்த இளைஞர் ஒருவர், 'ஆபத்து என்பதால் அபாய சங்கிலியை இழுத்தோம். இதில் என்ன தவறு?' எனக் கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள், 'நீங்கள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி விடுவீர்கள். அதன் பின், மேலதிகாரிகளின் கேள்விக்கு நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
'யாராவது இருவர், அபாய சங்கிலியை இழுத்ததற்கான காரணத்தை எழுதிக் கொடுத்துவிட்டு போங்க' என தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணியர் வாக்குவாதம் செய்ததும், அங்கிருந்து அதிகாரிகள் கிளம்பினர்.
ஆபத்தில் இருந்து காப்பாற்ற தானே அபாய சங்கிலி, உதவாத சட்டத்தை வைத்து ரயில்வே நிர்வாகம் என்ன செய்யப்போகிறது என, பயணியர் புலம்பினர்.