ADDED : மே 24, 2026 08:23 PM
மணலிபுதுநகர்: ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மணலிபுதுநகர் அடுத்த பழைய நாப்பாளையம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத், 27. இரு தினங்களுக்கு முன், உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்க, தன் அண்ணன் நவீன் என்பவருடன் வந்துள்ளார்.
துக்க வீட்டில், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, மணலிபுதுநகர் – எம்.ஆர்.எப்., நகர் அருகே நின்றிருந்த பிரசாத் மற்றும் நவீனை மர்ம கும்பல் வெட்டி தப்பியது.
இதில், சம்பவ இடத்திலேயே பிரசாத் உயிரிழந்தார். நவீன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த மணலிபுதுநகர் போலீசார், பாரதி ராஜா, 27, எழிலரசன், 21, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
மேலும், இந்த கொலையில் தொடர்புடையோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில், அதே பகுதியைச் சேர்ந்த தேவகுமார், 20, மகேஷ், 24, அஸ்வின், 21, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர்.
12 ரவுடிகள்
மணலிபுதுநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பழைய நாப்பாளையம் மற்றும் விச்சூர் ஆகிய இருவேறு இடங்களில், அடுத்தடுத்து 12 மணி நேரத்திற்குள்ளாக, இரண்டு கொலை சம்பவங்கள் அரங்கேறின. இதன் எதிரொலியாக, செங்குன்றம் காவல் துணை கமிஷனர் பாலாஜி உத்தரவின் படி, மணலி உதவி கமிஷனர் விவேகானந்தன், மணலிபுதுநகர் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார், குற்றப்பின்னனி கொண்ட, 12 பழைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
