ADDED : ஜூன் 26, 2026 10:41 PM
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, சென்னைக்கு கடத்த இருந்த அம்மன் உலோகச் சிலை மீட்கப்பட்டு, மூவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே, திம்மராஜன்பேட்டை பேருந்து நிலையம் அருகே இருந்து அம்மன் சிலையை கடத்தப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசாரை பார்த்ததும், தப்பிக்க முயன்ற மூவர் பிடிபட்டனர். விசாரித்ததில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 33, புருஷோத்தமன், 33, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், 36, என்பது தெரியவந்தது.
விக்னேஷ் வைத்திருந்த பையில், 30.5 செ.மீ., உயரம், 16 செ.மீ., அகலத்துடன், 2.300 கிலோ பழங்கால அம்மன் உலோகச் சிலை இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, சென்னைக்கு சிலையை கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து, மூன்று பேரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜூலை, 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர். மீட்கப்பட்ட அம்மன் சிலையை அதே நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இச்சிலை எந்தக் கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
