கட்டுமான திட்ட அனுமதிக்கு லஞ்சம் தற்காலிக ஊழியர்கள் மூவர் ‘சஸ்பெண்ட்’
கட்டுமான திட்ட அனுமதிக்கு லஞ்சம் தற்காலிக ஊழியர்கள் மூவர் ‘சஸ்பெண்ட்’
ADDED : ஜூலை 24, 2026 05:52 PM
குன்றத்துார்: கட்டுமான திட்டத்திற்கு அனுமதி பெற்று தருவதாக, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள் மூவரை, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா நேற்று, ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், தற்காலிக ஊழியரான தாமஸ், 40, கட்டுமான திட்ட அனுமதிக்காக வரும் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்கிறவர்.
குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், ‘ஆன்லைன்’ முறையில் விண்ணப்பிக்கும் மனுதாரர்களிடம், கட்டுமானத்திற்கு விரைவாக அனுமதி வாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கி வந்துள்ளார். இவரது பரிந்துரையின்படி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கி உள்ளனர்.
இதுபோல் தாமஸ், 650க்கும் மேற்பட்டோருக்கு, குறுகிய காலத்தில் கட்டுமான அனுமதி வாங்கி தந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்டுமானத்திற்கு அனுமதி பெற்றுத்தர தாமஸ் லஞ்சம் கேட்பது குறித்து, விண்ணப்பதாரர் ஒருவர், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகாவிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்தபோது, லஞ்சம் கேட்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தாமஸ் மற்றும் இதே அலுவலகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் ரதிமீனா, 36, ரஸ்மினாகாந்த், 45, ஆகியோரையும், கலெக்டர் சினேகா நேற்று, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
