sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

10 வினாடிகளில் அண்ணா சாலை சிக்னலை கடக்க... உங்களால் முடியுமா ஆபீசர்?

/

10 வினாடிகளில் அண்ணா சாலை சிக்னலை கடக்க... உங்களால் முடியுமா ஆபீசர்?

10 வினாடிகளில் அண்ணா சாலை சிக்னலை கடக்க... உங்களால் முடியுமா ஆபீசர்?

10 வினாடிகளில் அண்ணா சாலை சிக்னலை கடக்க... உங்களால் முடியுமா ஆபீசர்?

1


UPDATED : மே 21, 2024 09:11 AM

ADDED : மே 21, 2024 12:11 AM

Google News

UPDATED : மே 21, 2024 09:11 AM ADDED : மே 21, 2024 12:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையின் பிரதான சாலைகளின் சிக்னல்களில், பாதசாரிகள் கடப்பதற்காக ஒதுக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது. அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்டவற்றை கடக்க, 10 வினாடிகள் மட்டுமே வழங்கப்படுவதால், அதற்குள் சாலையை முழுமையாக கடக்க முடியுமா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 1.20 கோடி பேருக்கு மேல் வசிக்கின்றனர். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகன பெருக்கமும் அதிகரித்துள்ளது.

வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப சாலை கட்டமைப்பு இல்லாத நிலையில், மெட்ரோ ரயில் வழித்தட பணியால் குறுகிய சாலை, நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள், சாலையோர விதிமீறல் 'பார்க்கிங்' உள்ளிட்டவற்றால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையின் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை, எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஜவஹர்லால் நேரு சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில், மேற்கண்ட பிரச்னைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

காலை, மாலை 'பீக் ஹவர்' வேளைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி, காவல் துறை, மாநகர போக்குவரத்து உள்ளிட்டவை முன்வந்தன. ஆனால், இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது.

அத்திட்டத்தில், 'யு - டர்ன்' முறையில் பிரதான சாலையில் போக்குவரத்தை மாற்றி அமைக்கலாம் என்ற ஆலோசனை, போலீசாருக்கு வழங்கப்பட்டது.

அதன்படி, அண்ணா சாலை உள்ளிட்ட பிரதான சாலையில், வாகன நெரிசலுக்கு தீர்வு காணும், பல்வேறு இடங்களில், 'யு - டர்ன்' அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கான நேரத்தையும் போலீசார் குறைத்துள்ளனர். இதற்கு முன், சாலையின் அகலத்திற்கு ஏற்ப, பாதசாரிகளுக்கு சிக்னல் கடக்க நேரம் வழங்கப்பட்டது.

குறிப்பாக, அண்ணா சாலையில் 22 வினாடிகள் சாலையை கடக்க வழங்கப்பட்ட நிலையில், தற்போது 10 முதல் 12 வினாடிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.

இதனால், அண்ணா சாலை - திரு.வி.க.நகர் சாலை சந்திப்பு சிக்னலில், சாலையை கடப்போர், ஒருமுறை அனுமதிக்கப்படும் நேரத்தில், சாலையின் மீடியன் வரை சென்று நெடுநேரம் காத்திருக்கின்றனர். அடுத்த முறை சிக்னல் திறக்கும்போது தான், சாலையை முழுமையாக கடக்க முடிகிறது.

* அதேபோல், 150 அடி அகல சாலையான சோழிங்கநல்லுார் சந்திப்பில் 15 வினாடிகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. அக்கரை சந்திப்பிற்கு 10 வினாடி, டைடல் பார்க் சந்திப்பில் 15 வினாடி மட்டுமே தரப்படுகிறது.

பிரதான சாலையான மேற்கண்ட இடங்களில், சிக்னல்களை கடக்க கூடுதல் நேரம் இல்லாததால், பாதசாரிகள் ஓட்டமாய் ஓடுகின்றனர். அவர்களை மேலும் பதற்றமடைய வைக்கும் வகையில், வெள்ளை கோடுகளை கடந்து, வாகன ஓட்டிகள் விர்ர்ர்ரென ஆக்சலேட்டரை முறுக்கியபடி முந்த நிற்கின்றனர்.

இதுபோல, சென்னையின் பிரதான சாலைகளில் சிக்னல் வினாடி குறைப்பு, பல இடங்களில் சிக்னல் அமைக்காதது, சிக்னல் இயங்காத இடத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடாதது உள்ளிட்ட பிரச்னைகளும், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்து உள்ளது.

வாகன பெருக்கம் தான் காரணம்

சிக்னல்களில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க, 'யு - டர்ன்' வசதி செய்யப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், எந்த சிக்னல்களிலும் நேரத்தை குறைக்கவில்லை. சுரங்கப்பாதை மற்றும் மின்துாக்கி வசதி உள்ள சாலைகளில் கூட, பாதசாரிகளுக்கு, சிக்னல்களில் 20 வினாடிகள் தரப்படுகிறது.

வாகன எண்ணிக்கை அதிகம் காரணமாக, சிக்னல்களில் காத்திருக்கும்போது, நமக்கான நேரத்தை குறைத்துவிட்டது போல, பாதசாரிகள் கருதுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மீது கவனம் செலுத்தி வருகிறோம்; நேரம் குறைக்கப்படவில்லை.

- ஆர். சுதாகர்

போக்குவரத்து கூடுதல் கமிஷனர்

சென்னை பெருநகர காவல் துறை

'ஆடிட்டரி' கருவி என்னாச்சு?

மாற்றுத்திறனாளிகள் யாருடைய உதவியும் இன்றி, எளிதில் சாலையை கடக்கும் வகையில், 150 சிக்னல்களில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஆடிட்டரி' எனும் ஒலி எழுப்பும் கருவி, 2018ல் பொருத்தப்பட்டது.அவை, சிக்னல்களை பொறுத்து, 10 முதல், 15 வினாடிகள் வரை ஒலி எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டன. இரதனால், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், யாருடைய உதவியுமின்றி சாலையை எளிதில் கடந்து வந்தனர்.தற்போது பெரும்பாலான சிக்னல்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.



உயர் அதிகாரிகளுக்கு

பயப்படுகிறோம்!காலை 7:00 - 11:00 மணி வரை, மாலையில், 4:00 - 6:00 வரையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அந்த நேரங்கில், தலைமை செயலகம், நீதிமன்றங்கள், மத்திய - மாநில அரசு செல்லும் முக்கிய வி.வி.ஐ.பி.,க்கள், வி.ஐ.பி.,க்கள் வாகனங்கள் செல்லும். அவர்களின் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், உடனடியாக உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கின்றனர்.பணியில் கவனக்குறைவாக இருந்ததாக எங்கள் மீது குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதனால், எங்களின் கவனம், அதுபோன்ற வாகனங்கள் தடைபட்டு விடக்கூடாது என்பதிலேயே தான் இருக்கும். போக்குவரத்து ஸ்தம்பிப்பு ஏற்படாமல் இருக்க, சிக்னல்களின் நேரத்தையும் குறைத்து விடுவோம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.



பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்

இது குறித்து, பாதசாரிகள் கூறியதாவது:சென்னையில் பிரதான சாலைகளை கடக்க சுரங்கப்பாதை, நடைமேம்பாலம் உள்ளிட்டவை உள்ளன. பல சுரங்கப்பாதையில் போதிய வெளிச்சம் இல்லாததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை பயன்படுத்த முடிவதில்லை.தவிர, முழங்கால் மூட்டு வலி உடையோர், முதியோர் உள்ளிட்டோர் பயன்படுத்த, மின்துாக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகள் இல்லை. இதுபோன்ற வசதிகள் இருக்கும், திருமங்கலம் போன்ற பகுதிகளில் சிக்னல்களில், பாதசாரிகள், மின்துாக்கி, நடைபாதை போன்றவற்றை தான் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, அனைத்து சுரங்கப்பாதை, நடைமேம்பாலங்களில் பாதசாரிகளுக்கு முறையான வசதி, பாதுகாப்பு தன்மையை உறுதி செய்தால், தேவையின்றி சாலையை கடக்க வேண்டியிருக்காது.அதுவரை, பாதசாரிகளுக்கான நேரத்தை போலீசார் குறைக்காமல், 22 வினாடிகள் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us