ADDED : ஏப் 18, 2024 12:21 AM
சென்னை,''பிரதமர் மோடி, தமிழக அரசு இலவசமாக வழங்கும் மக்கள் நல திட்டங்களை ஒழிக்க பார்த்தார்,'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தென் சென்னை மற்றும்மத்திய சென்னை, தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, சென்னை, பெசன்ட் நகரில் நேற்று மாலை, பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
லோக்சபா தேர்தல், நம் நாட்டின் இரண்டாவதுசுதந்திரப் போர். 22 நாட்களாக தமிழகம் முழுதும் சுற்று பயணம் செய்திருக்கிறேன். பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து இருக்கிறேன்.
பாசிச எண்ணம்
மக்களின் முகத்தில் தெரிந்த எழுச்சி, மகிழ்ச்சியை வைத்து சொல்கிறேன். 40 தொகுதிகளிலும், நாம்தான் வெல்ல போகிறோம். நாட்டையும் நம் கூட்டணி தான் ஆளப்போகிறது.
ஏன் என்றால், தமிழகத்தில் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டு இருக்கிறது.
இதற்கு காரணம், பிரதமர் மோடியின் சர்வாதிகார மனப்பான்மை, மாநிலங்களை நசுக்கும் எதேச்சதிகாரம், ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிளவை உருவாக்கும் மதவாத பேச்சு, எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் பாசிச எண்ணம் மேலோங்கி உள்ளது.
ஆண்டுக்கு, 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என வாக்குறுதி கொடுத்து, ஆட்சி அமைத்த மோடி, 10 ஆண்டுகளில் 20 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா? இல்லை. இந்த கேள்வி கேட்டபோது, இளைஞர்களை பக்கோடா சுட சொன்னார்.
இப்போது, நடுநிலைவாக்காளர்களும் பா.ஜ.,வின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டு, வெறுக்க துவங்கியுள்ளனர்.
தேர்தல் பத்திர ஊழல், மோடியின் 'கிளீன் இமேஜ்' என்ற முகமூடியை கிழித்து எறிந்து, ஊழல் முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
சலுகை பறிப்பு
கொரோனா தொற்றுக் காலத்தில் கூட, பி.எம்.கேர்ஸ் நிதி எனவசூல் வேட்டை நடத்தினார். ரபேல் விமானத்திலும் ஊழல்.
ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒரு வேந்தரை நியமிக்க வேண்டும் என்றால், அதற்கு பொருத்தமான நபர், மோடி தான். ஊழலை சட்டப்பூர்வமாக்கிய சாதனையாளர்.
தமிழக அரசு இலவசமாக வழங்கும் மக்கள் நல திட்டங்களை மோடி ஒழிக்க பார்த்தார். இன்னொரு பக்கம் கார்ப்பரேட்களுக்கு வரி சலுகைகளை அள்ளிக் கொடுத்தார்.
முதியவர்கள் ரயில் கட்டண சலுகையையும் பறித்துவிட்டார். மக்களின் வறுமை, இயலாமையில் லாபம் பார்க்க துடிக்கிறார். இதில் 'பத்தாண்டு கால ஆட்சி, டிரெய்லர் தான்' என்கிறார்.
மோடிக்கு, மூன்றாவது முறை வாய்ப்பு என்பது, இந்த நாட்டு மக்கள், தங்களின் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதற்கு சமம்.
இதை நான் தனிப்பட்ட ஸ்டாலினாகவோ,ஒரு கட்சி தலைவராகவோ சொல்லவில்லை. பொறுப்புமிக்க இந்திய குடிமகனாக சொல்கிறேன். மோடியின் பேச்சை கவனித்து பாருங்கள்.
நாங்கள், மூன்று ஆண்டுகளில் என்ன என்ன திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம், என்ன என்ன சாதனைகள் செய்திருக்கிறோம் என, மேடைக்கு மேடை எடுத்துக் கூறி ஓட்டு கேட்கிறோம்.
ஆனால் மோடி, அனைத்து பிரசார மேடைகளையும், நாட்டு மக்களை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்கிறார். ஜாதி, மதம், உணவு வேறுபாடுகளை பேசி, எதிர்க்கட்சிகளை திட்டி, வெறுப்புணர்வை விதைக்க துடிக்கிறார்.
ஒற்றை சர்வாதிகார நாடு
மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது; லோக்சபாவில் விவாதம் இருக்காது; தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக இருக்காது; மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. சட்டசபைகள் இருக்குமா என்பதே சந்தேகம். ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்.
இடஒதுக்கீடு வழங்கும் சமூக நீதியை குழிதோண்டி புதைத்துவிடுவார்கள். அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டம் காற்றில்பறக்க விடப்பட்டு, ஆர்.எஸ்.எஸ்., சட்டம்தான் நாட்டை ஆளும்.
காவிக்கொடி தேசியக் கொடியாக ஆகிவிடும். இதையெல்லாம் தடுத்தாக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில், நாம் எல்லோரும் இருக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

