ADDED : ஜூன் 07, 2026 08:14 PM
ராஜமங்கலம்: மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வில்லிவாக்கம், வடக்கு ஜெகநாதன் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ், 57. இவர், அயனாவரம் மாநகர பேருந்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிகிறார்.
கடந்த 5ம் தேதி இரவு, தன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை ரமேஷ் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவர்களின் தந்தை, ‘பி’ பிரிவு ரவுடி அருண் பிரபு, 36 என்பவர், தன் நண்பர்களுடன் சென்று ரமேஷை தாக்கியுள்ளார்.
பலத்த காயமடைந்த ரமேஷ், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து விசாரித்த ராஜமங்கலம் போலீசார், அருண் பிரபுவை கைது செய்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
மேலும், வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த நித்திஷ், 20, மற்றும் பிரபுராஜ், 40, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
