/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேரோடு பெயர்க்கப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்த்தன: இ.சி.ஆர்., சோழிங்கநல்லுாரில் பராமரித்து அசத்தல்
/
வேரோடு பெயர்க்கப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்த்தன: இ.சி.ஆர்., சோழிங்கநல்லுாரில் பராமரித்து அசத்தல்
வேரோடு பெயர்க்கப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்த்தன: இ.சி.ஆர்., சோழிங்கநல்லுாரில் பராமரித்து அசத்தல்
வேரோடு பெயர்க்கப்பட்ட மரங்கள் மீண்டும் துளிர்த்தன: இ.சி.ஆர்., சோழிங்கநல்லுாரில் பராமரித்து அசத்தல்
ADDED : மே 25, 2024 06:19 PM

சென்னை :
சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. நான்கு வழியான இந்த சாலையை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரம், ஆறு வழியாக மாற்றப்பட்டு வருகிறது.
மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அக்கரை பகுதியில் விரிவாக்கம் பணி நடக்கிறது. இதில், வடிகால் முடிந்த பகுதியில் சாலை விரிவாக்கம் நடக்கிறது.
விரிவாக்கத்திற்கு இடையூறாக நின்ற உயர் அழுத்த மின்கம்பங்கள், சாலையோரம் மாற்றி அமைக்கும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது. இந்நிலையில், நீலாங்கரை முதல் அக்கரை வரை, 5 முதல் 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன.
சாலை விரிவாக்கத்திற்காக இந்த மரங்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மரங்களை வெட்டி அகற்றாமல், மாற்று இடத்தில் நட வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முதற்கட்டமாக, வாகை, அசோகா, பாதாம், உதயம் உள்ளிட்ட 97 மரங்களின் கிளைகளை வெட்டி, வேரோடு தாய் மண்ணுடன் பெயர்த்தெடுத்து, சோழிங்கநல்லுார், ராமன்தாங்கல் ஏரிக்கரையில், மறுநடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு நடப்பட்ட மரங்கள், தற்போது துளிர்விட்டுள்ளன.
இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில், கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி பசுமை குழு கூட்டம் நடந்தது. இதில், 97 மரங்களை வேரோடு பிடுங்கி மறுநடவு செய்யவும், இடையூறாக உள்ள 758 மரங்களை வெட்டி அகற்றவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கு ஈடாக, ஒரு மரத்திற்கு, 10 மரங்கள் வீதம், 7,580 மரக்கன்றுகள் நட அனுமதி வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நட, 3.26 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்து, இடைக்கால தொகையாக வனத்துறைக்கு, 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. நீலாங்கரை முதல் அக்கரை வரை 758 மரங்கள் ஏலம் விட்டு வெட்டி அகற்றப்படுகின்றன.
மறுநடவு செய்ய உள்ள, 97 மரங்களை சோழிங்கநல்லுார் ராமன்தாங்கல் ஏரிக்கரையில் நடப்படுகிறது. இந்த பணி, கோவையைச் சேர்ந்த 'கிரீன் கேர்' என்ற அமைப்புடன் சேர்ந்து செய்கிறோம்.
இதில், பல மரங்கள் துளிர்விட்டு வளர துவங்கி உள்ளன. மறுநடவு செய்ய முடிவு செய்யப்பட்ட சில மரங்கள் பட்டு போகும் நிலையில் இருந்தது. அவை வெட்டி அகற்றப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.