/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பு அகற்றாமல் கால்வாய் பணியில் அவசரம்
/
ஆக்கிரமிப்பு அகற்றாமல் கால்வாய் பணியில் அவசரம்
ADDED : மே 14, 2024 01:03 AM
சென்னை,
ஜி.என்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றுவதற்கு முன்பு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டதால், அரசு நீதி வீணடிக்கப்பட்டு உள்ளது.
மாதவரம் ரவுண்டானா - மூலக்கடை மேம்பாலம் இடையிலான ஜி.என்.டி., சாலை 3 கி.மீ., நீளம் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த சாலையை, 100 அடிக்கு மேல் நெடுஞ்சாலைத்துறை அலகப்படுத்தியது. விசாலமான சாலையில் போக்குவரத்து தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
ஆனால், மாதவரம் போக்குவரத்து பணிமனைக்கு அருகே, சாலையை ஆக்கிரமித்து தனியார் ஒருவர் வாயிலாக 2,170 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டு இருந்தது.
இந்த கட்டடத்தில் உணவு விடுதி, அதன் பின்புறம் உள்ள காலி நிலத்தில், பழைய கார் விற்பனை நிலையம் ஆகியவை இயங்கி வந்தன. இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 20 கோடி ரூபாய். ஆக்கிரமிப்பு காரணமாக, இந்த இடத்தில் மட்டும் போக்குவரத்து தடைப்பட்டு நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வந்தது.
வடகிழக்கு பருவமழை நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கையாக, ஜி.என்.டி., சாலையில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை மாநகராட்சி வாயிலாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்த நெடுஞ்சாலைத்துறை தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், நிலத்தை ஒப்படைக்க ஆக்கிரமிப்பாளர் முன்வரவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், நெடுஞ்சாலைத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருக்காமல், ஒப்பந்த நிறுவனம், மழைநீர் கால்வாய் பணியை மேற்கொண்டது.
கட்டடத்தின் ஓரத்தில், மழைநீர் கால்வாய் அமைக்காமல், அதை சுற்றி 'யு' வடிவில் சாலையிலேயே அவசர கதியில், 100 மீட்டர் அளவிற்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. கனரக வாகனங்கள் நடமாட்டத்தால், மழைநீர் கால்வாய் சேதம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிக்கும் பணிகளை, நெடுஞ்சாலை துறையினர் துவங்கியுள்ளனர். அதேநேரத்தில், அவசர கதியில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாயை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. தேவையற்ற செலவால், அரசு நீதி வீணடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

