/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விலங்குகள் தொடர் மாயம், பலி சம்பங்களால் அதிர்வலை ஏற்படுத்திய வண்டலுார் பூங்கா வெளிப்படை விசாரணை கோரிக்கை
/
விலங்குகள் தொடர் மாயம், பலி சம்பங்களால் அதிர்வலை ஏற்படுத்திய வண்டலுார் பூங்கா வெளிப்படை விசாரணை கோரிக்கை
விலங்குகள் தொடர் மாயம், பலி சம்பங்களால் அதிர்வலை ஏற்படுத்திய வண்டலுார் பூங்கா வெளிப்படை விசாரணை கோரிக்கை
விலங்குகள் தொடர் மாயம், பலி சம்பங்களால் அதிர்வலை ஏற்படுத்திய வண்டலுார் பூங்கா வெளிப்படை விசாரணை கோரிக்கை
ADDED : ஏப் 27, 2024 12:15 AM

தாம்பரம், வண்டலுார் உயிரியல் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பை பெற்றது. கடந்த 2022ல், நாட்டில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட பூங்காக்களில், மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றும் பூங்காவிற்கான முதல் பரிசை கைப்பற்றியது.
ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இருந்தே விலங்குகள் மாயமாவது, இறப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வண்டலுார் பூங்கா வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இந்தாண்டில்...
கடந்த ஜன., 28ம் தேதி, உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டு, பூங்கா மருத்துவமனை அருகே கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. பிப்., 13ம் தேதி, உணவு வைக்கும் போது, இரண்டு அனுமன் குரங்குகள், கூண்டுகளில் இருந்து தப்பித்தன.
தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், மண்ணிவாக்கத்தில் இருந்து ஒரு குரங்கும், அய்யஞ்சேரி பகுதியில் இருந்து மற்றொரு குரங்கும் பிடிபட்டன.
இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்குள், மார்ச் 10ம் தேதி காட்டு மாடு ஒன்று கூண்டில் இருந்து தப்பியது. காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு மாடு, அடுத்த நாள் அதுவாகவே கூண்டிற்கு வந்தது.
இதற்கிடையில், அதே மாதத்தில் விலங்குகள் புனர்வாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த கழுகு ஒன்றும் தப்பியது.
இதைத் தொடர்ந்து, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட, 'விஜயன்' என்ற வங்கப்புலி, கடந்த பிப்., 20ம் தேதி பரிதாபமாக இறந்தது.
நடப்பு ஏப்ரல் மாதத்தில் ஆண் ராஜநாகம், சாம்பார் மான் எனும் கடமான், சியாமிஸ் முதலை ஒன்றும் இறந்தன.
இந்தாண்டில் அடுத்தடுத்து நடந்த மாயம் மற்றும் தொடர் பலி சம்பவங்கள், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. இதற்கு, விலங்கு பராமரிப்பில் அனுபவம் இல்லாதவர்களை பணியமர்த்துவதே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனுபவம் இல்லாத நபர்களை ஈடுபடுத்தும் போது, அவர்களுக்கு விலங்குகளை கையாளுவது எப்படி; உணவு வைப்பது எப்படி என்பது தெரிவவில்லை. குறிப்பாக, அனுபவ ஊழியர்களின் குரல்களை கேட்டாலே, விலங்குகள் அமைதியாகி விடும்; அவற்றை லாவகமாக கையாளுவது எப்படி என்பது அவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கும்.
இப்பிரச்னை தொடர்பான வெளிப்படையான விசாரணை நடத்தி, காரணத்தை கண்டறிந்து, அவற்றை சரிசெய்து, விலங்குகள் மாயமாவது, இறப்பதை தடுக்க வேண்டும் என்றும், சிறந்த பூங்கா என்ற விருது பெற்ற வண்டலுாரின் பெருமையை நிலைநாட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும், விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனுபவம் இல்லாத ஊழியர்களை பணியமர்த்துவதாக கூறுவது தவறு. 6 வனச்சரகங்களில், தற்காலிக பணியாளர்கள் 217, நிரந்தர பணியாளர்கள் 130 என, மொத்தம், 347 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அனைவரும் அனுபவ ஊழியர்கள் தான். விலங்கு பராமரிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். ராஜநாகம், சியாமிஸ் முதலை வயது முதிர்ப்பின் காரணமாக இறந்தன. கூண்டை சுத்தம் செய்த போது, அனுமன் குரங்குகள் எப்படியோ தப்பின. அவற்றை பிடித்து விட்டோம். சாம்பார் மான் இறப்பு என்பது இயல்பாக நடக்கும் விஷயம் தான். - பூங்கா நிர்வாகம்.
விரைவில் வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி
வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 'டீனா' என்ற 18 வயது பெண் வரிக்குதிரை, உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 2022 மே மாதம் இறந்தது.
அதேபோல், 'ஆயிஷா' என்ற, 28 வயதுடைய பெண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே, பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஜோடியாக, ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கி கொண்டுவர, விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கொண்டு பலமுறை முயற்சித்தும் நிறைவேறவில்லை.
தற்போது, வெளிநாடுகளில் இருந்து இவ்விலங்குகளை கொண்டு வருவது குறித்து, மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அதிகாரிகளுடன், பூங்கா அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனால், அடுத்த மூன்று மாதங்களில், வண்டலுார் பூங்காவிற்கு வரிக்குதிரை மற்றும் ஒட்டகச்சிவிங்கி கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

