/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளக்கரையை ஆக்கிரமித்து சாலை அதிகாரிகளிடம் கிராமத்தினர் தகராறு
/
குளக்கரையை ஆக்கிரமித்து சாலை அதிகாரிகளிடம் கிராமத்தினர் தகராறு
குளக்கரையை ஆக்கிரமித்து சாலை அதிகாரிகளிடம் கிராமத்தினர் தகராறு
குளக்கரையை ஆக்கிரமித்து சாலை அதிகாரிகளிடம் கிராமத்தினர் தகராறு
ADDED : ஆக 31, 2024 12:23 AM

மாமல்லபுரம்,
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில், மாரி சின்னம்மன் கோவில் அருகில், வேப்பஞ்சாலை குளம் உள்ளது.
குளத்தின் வடபுற கரையில், ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகமும், சில வீடுகளும் உள்ளன. பள்ளி வளாகத்திற்கும் குளத்திற்கும் இடையே பாதை ஒதுக்கி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. பின், ஊராட்சி நிர்வாகம், மண் பாதையை 6.75 அடி அகல கான்கிரீட் சாலையாக மேம்படுத்தியது.
தற்போதைய ஊராட்சி நிர்வாகிகள், குறுகிய கான்கிரீட் சாலையை, குளத்து நீர்ப்பிடிப்பு பகுதி விளிம்பு வரை விரிவுபடுத்தினர்.
அப்போது, விவசாயப் பணிக்கு டிராக்டர் செல்லவும், கோவிலுக்கு வரும் சிறிய வாகனங்களை நிறுத்தவும், சாலை விரிவுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், குளத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற கோரியும், உயர் நீதிமன்றத்தில் இவ்வூரைச் சேர்ந்த சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் புஷ்பராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி உள்ளிட்டோர், நேற்று காலை 11:30 மணிக்கு, குளத்து பகுதியை அளவீடு செய்தனர்.
அதில், கான்கிரீட் சாலை மட்டுமின்றி, பள்ளியின் தென்புற வகுப்பறை கட்டடமும் , குளத்து பகுதியை ஆக்கிரமித்தே கட்டப்பட்டுள்ளது தெரிந்தது.
நீதிமன்ற உத்தரவின்படி, சாலையை மட்டும் அகற்றலாம் என, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.
ஆனால் கிராம மக்களோ, பள்ளி கட்டடமே ஆக்கிரமிப்பாக உள்ளபோது, சாலையை மட்டும் ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயற்சிப்பது ஏன் என கேட்டு, தகராறு செய்தனர்.
ஆனால், வழக்கு தொடுத்த தரப்பினர், சாலையை அகற்றியே ஆகவேண்டும் என, உறுதியாக இருந்தனர். இதனால், இரு தரப்பினரிடையே தகராறு வலுத்தது.
இவ்விவகாரம் குறித்து, துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.