/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடும்ப அரசியலின் மொத்த உருவம் தி.மு.க., மீது வினோஜ் கடும் தாக்கு
/
குடும்ப அரசியலின் மொத்த உருவம் தி.மு.க., மீது வினோஜ் கடும் தாக்கு
குடும்ப அரசியலின் மொத்த உருவம் தி.மு.க., மீது வினோஜ் கடும் தாக்கு
குடும்ப அரசியலின் மொத்த உருவம் தி.மு.க., மீது வினோஜ் கடும் தாக்கு
ADDED : ஏப் 06, 2024 11:57 PM

சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணி, மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளர் வினோஜ், நேற்று காலை 7:30 மணிக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே, தன் பிரசாரத்தை துவங்கினார்.
பின், கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மீன் சந்தை வியாபாரிகளிடம் நேரடியாக சந்தித்து, ஓட்டு சேகரித்தார். அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்தினார்.
பிரசாரத்தின் போது, அவர் பேசியதாவது:
மத்திய சென்னையை பொறுத்தவரை, 40 ஆண்டுகளாக தி.மு.க,வின் கோட்டையாகவே உள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்த தொகுதியை வைத்திருந்தும், மக்கள் ஏழ்மையான நிலையிலேயே தான் இருக்கின்றனர். இது குறித்து அவர்கள், தற்போது யோசிக்கத் துவங்கியுள்ளனர்.
திராவிட கட்சிகள், பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது என்பதை, மக்களுக்கு பா.ஜ., புரிய வைக்கிறது. வெற்றி பயணத்தை நோக்கியே பா.ஜ., செல்கிறது.
மத்திய சென்னையில், திராவிட கட்சிகள் மீது அதிகளவில் எதிர்ப்பு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதல், தி.மு.க., குடும்ப அரசியலின் மொத்த உருவமாக, மத்திய சென்னை உள்ளது.
இத்தொகுதியை பா.ஜ., கையில் எடுக்கும்போது, தி.மு.க.,வின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும்.
மத்திய சென்னையில், தி.மு.க.,வை தோற்கடித்தால் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அதை தோற்கடித்ததற்கு சமம். அந்த அளவிற்கு, இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இறங்கி உள்ளோம்.
கடந்த 2019 தேர்தலின்போது மோடி மீது 'ஆர்ட்டிபிஷியல்' கோபத்தை, மக்களிடம் தி.மு.க., ஏற்படுத்தியிருந்தது. அதனால் இம்முறை, தமிழகத்தை, தி.மு.க., கையில் இருந்து மீட்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான், களத்தில் போராடுகிறோம்.
கடந்த தேர்தலில், இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டளிக்க விரும்பாத, 12 சதவீத ஓட்டு, மூன்றாவது இடத்தில் இருந்த மக்கள் நீதி மய்யத்துக்கு சென்றது. தற்போது அந்த ஓட்டுகள் அனைத்தும் பா.ஜ.,வுக்கு இம்முறை வந்து சேரும். தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்ததும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கதை முடிந்துவிட்டது.
தி.மு.க., ஆட்சியை மக்கள் எதிர்க்கின்றனர். குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை மத்திய சென்னையில் 60 சதவீத பேருக்கு கிடைக்கவில்லை. கடந்த மழை வெள்ளத்தில் தவித்ததை, மக்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.
மத்திய சென்னை எம்.பி., தயாநிதியுடன், நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். மக்களின் அறியாமையை பயன்படுத்துவது தி.மு.க., திறமையும், சாதனையாகவும் தான் உள்ளது. ஏழ்மை, அறியாமையை, தி.மு.க., பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகிறது.
தி.மு.க., -- அ.தி.மு.க, இரு கட்சிகளும் சந்தர்ப்பவாத கட்சிகளாக தான் உள்ளன. பா.ஜ.,வினருக்கு அண்ணாமலை ஒரு நட்சத்திரமாக திகழ்கிறார்.
மக்கள் தங்கள் கஷ்டத்தை அவர்களே தான் தீர்க்க வேண்டும்; அதற்கான நாள் தான் ஏப்ரல் 19ம் தேதி. மக்கள் தலையெழுத்தை மாற்ற தாமரைச் சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும்.
நான் வெற்றி பெற்றால், மக்களுடன் மக்களாக இருந்து உங்கள் குறைகளை நிச்சயம் தீர்ப்பேன். மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தொகுதிக்கு கொண்டு வருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

