/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேட்புமனுவை வாபஸ் வாங்க சுயேச்சைகளுக்கு வலை
/
வேட்புமனுவை வாபஸ் வாங்க சுயேச்சைகளுக்கு வலை
ADDED : மார் 30, 2024 12:31 AM

சென்னை, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள், சென்னை மூன்று லோக்சபா தொகுதிகளில் நிற்கின்றனர்.
இவர்கள், எதிர் தரப்பு ஓட்டுகளை கவர்வதற்காகவும், ஓட்டுகளை பிரிப்பதற்காகவும், ஒவ்வொரு தொகுதிக்கும் 12 முதல் 18 பேர் வரை, கட்சி சார்பு சுயேச்சைகளாக போட்டியிட மனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர். தவிர, தனி சுயேச்சைகளும் வேட்புமனு கொடுத்து உள்ளனர்.
இன்று, வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாள். இதனால், தனி சுயேச்சைகளாக நிற்போரின் மனுவை வாபஸ் பெற வைக்க, முக்கிய கட்சியைச் சேர்ந்தோர், அவர்களை வலைவீசி தேடுகின்றனர்.
இதன் காரணமாக பலர், தங்கள் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து, தலைமறைவாகி உள்ளனர்.
விலைபோகாத தனி சுயேச்சைகள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தல்களில், சுயேச்சைகள் செல்வாக்கை பொறுத்து, சில கட்சிகள் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி, வாபஸ் பெற வைக்க முயன்றனர். சிலர், அவர்கள் பேரத்துக்கு உடன்பட்டு, மனுவை வாபஸ் பெற்றனர்.
ஆனால் நாங்கள், மக்களின் மனநிலையை அறியவும், தேர்தல் நடைமுறைகளை தெரிந்து கொள்ளவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுயேச்சையாக போட்டியிடுகிறோம்.
எங்களுக்குகிடைக்கும் ஓட்டுகள் குறித்து கவலையில்லை. யார் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம் என்ற நிலையை உருவாக்குகிறோம். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், வாபஸ் பெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
இன்று, வாபஸ் பெறுவோரின் பின்புலத்தை அறிந்தால், அவர்கள் எதற்காக வாபஸ் பெற்றனர் என்பது தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

