/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு இடத்தில் வெட்டி எடுத்த மணல் குன்றுகளாக குவித்து வைத்தது யார்?
/
அரசு இடத்தில் வெட்டி எடுத்த மணல் குன்றுகளாக குவித்து வைத்தது யார்?
அரசு இடத்தில் வெட்டி எடுத்த மணல் குன்றுகளாக குவித்து வைத்தது யார்?
அரசு இடத்தில் வெட்டி எடுத்த மணல் குன்றுகளாக குவித்து வைத்தது யார்?
UPDATED : மே 16, 2024 06:35 AM
ADDED : மே 16, 2024 12:45 AM

சென்னை: மாதவரம் பால்பண்ணை அடுத்த கொசப்பூரில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள, ‛ஸ்பிக் ஆரோ மெடிக்' நிறுவனம் இயங்கிய இடத்தில், கடந்த மாதம் முதல் மணல் மாபியாக்களால், பல கோடி ரூபாய் மதிப்பிலான மணல் மற்றும் சவுடு மண் திருடப்பட்டது.
மணல் திருட்டுக்காக ஏராளமான மரங்களும், வேரோடு சாய்க்கப்பட்டன. மேலும், அங்குள்ள உயர் மின் அழுத்த கோபுரங்களும் சேதமடையும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. இது குறித்து, நம் நாளிதழில், 10 மற்றும் 13ம் தேதிகளில் செய்தி வெளியானது. அதன்பின், சென்னை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், மூன்று மணி நேரம் ஆய்வு செய்தனர்.
அதில், மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன. போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் 'ஆசி'யுடன் நடந்த மணல் திருட்டால், மாபியாக்களின் அட்டூழியம் அம்பலமானது.
அதன் பின், மாதவரம் தாசில்தார் வெங்கடாஜலபதி மற்றும் தொழில்துறை பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள், இரண்டு மணி நேரம் ஆய்வு செய்தனர். கடந்த, ஒரு மாதத்தில், 1,000 லோடு வரை மணல் திருடு போயிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'அரியலுார் ஏரிக்கு எதிரே உள்ள மேற்கண்ட இடத்தில், மணல் திருட்டுக்காக லாரி மற்றும் பொக்லைன் வாகனங்கள் உள்ளே சென்று வர முடியாத வகையில், 2 அடி ஆழம், 20 அடி நீளத்திற்கு பள்ளம் வெட்டப்பட்டது. இனி லாரிகள் உள்ளே வந்து மணல் திருட முடியாது' என அவர்கள் கூறினர்.
ஆனால், மாபியாக்களால் ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில், தேங்கிய ஊற்று நீரில், 20 லோடு வரை வெளியேற்றக்கூடிய அளவிற்கு, மணல் மற்றும் சவுடு மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள், அவற்றை, மாற்று வழியாக வெளியே கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது. எனவே, கேமராக்கள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
கொசப்பூரில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து, திருடிய மணலுக்காகவும், அதற்காக வெட்டி சாய்க்கப்பட்ட மரங்களுக்காகவும், இழப்பீடு வசூலிக்க வேண்டும். வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், திருடுவதற்கு வசதியாக, அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள மணல் மற்றும் சவுடு மண் ஆகியவற்றை, அரசு கிடங்குகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்.