/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை எல்லை சாலைக்கு ரெட்டேரி மண் நிதித்துறை, நீர்வளத்துறை கவனிக்குமா?
/
சென்னை எல்லை சாலைக்கு ரெட்டேரி மண் நிதித்துறை, நீர்வளத்துறை கவனிக்குமா?
சென்னை எல்லை சாலைக்கு ரெட்டேரி மண் நிதித்துறை, நீர்வளத்துறை கவனிக்குமா?
சென்னை எல்லை சாலைக்கு ரெட்டேரி மண் நிதித்துறை, நீர்வளத்துறை கவனிக்குமா?
ADDED : செப் 09, 2024 02:41 AM

சென்னை:சென்னை எல்லை சாலை பணிக்கு, ரெட்டேரியில் துார்வாரும் மண்ணை பயன்படுத்தினால், இரண்டு பணிகளும் விரைந்து முடிய வாய்ப்புள்ளது.
மாதவரம் ரெட்டேரி 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை துார்வாரி ஆழப்படுத்தி, 0.50 டி.எம்.சி., நீரை சேமித்து, வறட்சி காலங்களில் சென்னையின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது.
இதற்காக, 47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட மற்றும் திரவ கழிவுகள், மண் ஆகியவற்றை அகற்றி துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீர்வளத்துறை வாயிலாக, சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.என்., என்ற தனியார் நிறுவனத்திடம் இப்பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்நிறுவனம் துணை ஒப்பந்தம் செய்து, சிறிய நிறுவனங்களிடம் பணியை வழங்கியுள்ளது.
ஏரியிலிருந்து அகற்றப்படும் மண்ணை, கரைகளில் கொட்டி பலப்படுத்த வேண்டும். எஞ்சிய மண்ணை நீர்வளத்துறைக்குச் சொந்தமான காலி இடங்களில் சேகரித்து வைக்க வேண்டும்.
வெள்ளக்காலங்களில் அவசர தேவைக்கு இந்த மண்ணை பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, இந்த ரெட்டேரியை இரண்டு பிரிவாக பிரிக்கிறது. இதன் ஒரு பகுதியில், கரையை பலப்படுத்தும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.
ரகசிய பேச்சு
அங்கு மண்ணை அகற்றி, கரை அமைக்கப்பட்டு உள்ளது. ஏரியின் மையத்தில், மண் திட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு அதிக அளவில் கிடைத்த வண்டல் மண் மற்றும் மணல், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு, விதி மீறி விற்பனை செய்யப்பட்டது.
இதன் வாயிலாக, 30 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசியல்வாதிகள் துணையுடன், நீர்வளத்துறை அதிகாரிகளும் இதற்கு துணை போய் உள்ளனர்.
இந்த மண் மற்றும் மணலை முறையாக விற்பனை செய்திருந்தால், அரசிற்கு உரிய வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், ஆதாயம் தேடும் சில அதிகாரிகள், இன்னும் இவற்றை மறைமுகமாக விற்க, ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து எண்ணுார் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி துறைமுகங்களின் சரக்கு போக்குவரத்திற்காக, சென்னை எல்லை சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது, காட்டுப்பள்ளி முதல் செங்கல்பட்டு, தச்சூர் வரை முதல் பகுதியாகவும், தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை இரண்டாவது பகுதியாகவும் பணிகள் நடக்கின்றன.
இப்பணிக்கு, அதிக அளவில் மண் தேவைப்படுகிறது. இதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாலவாக்கம், செங்கரை ஏரிகளில் மண் அள்ளுவதற்கு, ஒப்பந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
விதியை மீறி மண் அள்ளுவதால் விவசாயம் பாதிக்கப்படும்; நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், பணிகளை தொடர முடியாமல், ஒப்பந்த நிறுவனம் திணறி வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கும், இது நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், ரெட்டேரியை ஆழப்படுத்தி எடுக்கப்படும் மண்ணை, சென்னை எல்லை சாலைக்கு பயன்படுத்தினால், அரசுக்கும் வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விரைந்து முடிவு
சென்னை எல்லை சாலை பணியை மேற்கொள்ளும் தமிழக சாலை மேம்பாட்டு திட்ட அதிகாரி கூறியதாவது:
ரெட்டேரி மண், சாலை அமைப்பதற்கு தரமானது என கண்டறிந்து உள்ளோம். நீர்வளத்துறை ரெட்டேரி மண்ணை வழங்கினால், அதை சாலை பணிக்கு குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த தயாராக உள்ளோம்.
இதன் வாயிலாக, அரசுக்கும் வருவாய் கிடைக்கும். இரண்டு பணிகளும் விரைந்து முடியும். ரெட்டேரியில் இருந்து சென்னை எல்லை சாலை பணி நடக்கும் தச்சூர் உள்ளிட்ட பகுதிகள், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தான் உள்ளன.
அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்கும். குறைந்த கால அவகாசமே உள்ளது. இவ்விஷயத்தில் நிதித்துறை மற்றும் நீர்வளத்துறை செயலர்கள் கூடி பேசி, விரைந்து முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.