/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எலி மருந்து சாப்பிட்ட பெண் போலீஸ் உயிரிழப்பு
/
எலி மருந்து சாப்பிட்ட பெண் போலீஸ் உயிரிழப்பு
ADDED : செப் 04, 2024 01:29 AM
அயனாவரம்:கடன் பிரச்னையால், எலி மருந்து சாப்பிட்ட பெண் போலீஸ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
திருச்சியைச் சேர்ந்த தங்கமீனா என்பவர், 2020ல் காவல்துறையில் சேர்ந்து, சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை பெண் போலீசாக பணிபுரிகிறார். திருமணமாகாத இவர், அயனாவரத்தில் உள்ள தம்பியின் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தங்கமீனா, உடல்நிலை பாதிக்கப்பட்டு வீடு திரும்பினார். அவரது தம்பி விசாரித்த போது, குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து குடித்துவிட்டதாகக் கூறி மயங்கியுள்ளார். இதையடுத்து, தங்கமீனாவை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தங்கமீனாவை அயனாவரம் போலீசார் விசாரித்ததில், கடன் பிரச்னையால் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி தங்கமீனா உயிரிழந்தார். இதுகுறித்து, அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.