/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் தேக்கத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
/
கழிவுநீர் தேக்கத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 05, 2024 12:44 AM

புளியந்தோப்பு, புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை, மன்னார்சாமி தெரு பகுதியில் சாலையில் தினமும் கழிவுநீர் தேங்குகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கூறியும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று டிகாஸ்டர் சாலையில் கூடி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சமீபத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாயில் தண்ணீர் செல்ல போதிய வழியில்லை. சாலை தாழ்வாக இருப்பதால் சுற்றுவட்டார பகுதி தண்ணீர் முழுதும், இங்கே வந்து சாலையில் தேங்குகிறது.
மழைநீர் கால்வாயில் தண்ணீர் சரியாக வெளியே செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். சாலையை புதிதாக போட வேண்டும். அப்போது தான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற புளியந்தோப்பு போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினர். கழிவு நீரகற்று லாரியை வரவழைத்து, கழிவுநீரை அப்புறப்படுத்தினர்.