/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்புலியூரில் கால்வாய் கட்ட எதிர்ப்பு போலீஸ் பாதுகாப்புடன் பணி துவக்கம்
/
இரும்புலியூரில் கால்வாய் கட்ட எதிர்ப்பு போலீஸ் பாதுகாப்புடன் பணி துவக்கம்
இரும்புலியூரில் கால்வாய் கட்ட எதிர்ப்பு போலீஸ் பாதுகாப்புடன் பணி துவக்கம்
இரும்புலியூரில் கால்வாய் கட்ட எதிர்ப்பு போலீஸ் பாதுகாப்புடன் பணி துவக்கம்
ADDED : பிப் 25, 2025 02:25 AM

தாம்பரம், தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் கிழக்கு பகுதியில், விமானப்படை பயிற்சி மைய சுற்றுச்சுவரை ஒட்டி, பெரிய ஏரி உள்ளது.
மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால், இரும்புலியூர், அருள் நகர் அருகேயுள்ள கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறி, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, மேற்கு தாம்பரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும்.
முறையான கால்வாய் இல்லாததால், இரும்புலியூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.
இதற்கு தீர்வாக, இரும்புலியூர் - ரயில்வே லைன் - முடிச்சூர் சாலை வழியாக சென்று அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், 12,000 அடி நீளத்திற்கு, 96 கோடி ரூபாய் செலவில் மூடு கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக, இரும்புலியூர் ஏரி முதல் பழைய ஜி.எஸ்.டி., சாலை வரை கால்வாய் கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, இரும்புலியூர் டி.டி.கே., நகர் சுரங்கப்பாதை முதல் தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக, 1 கி.மீ., துாரத்திற்கு கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இரும்புலியூர் ரோஜா தெருவில், 396 அடி நீளத்திற்கு இக்கால்வாய் செல்கிறது. அத்தெருவில் கால்வாய் அமைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
மழைநீர் போக்கு குறித்து ஆராய்ந்தே இத்தெரு வழியாக கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறியும், அவர்கள் கேட்கவில்லை. பின், பொதுமக்களுடன் கூட்டம் நடத்தி, திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அப்போதும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ரோஜா தெருவில், போலீசார் பாதுகாப்புடன் மூடு கால்வாய் கட்டும் பணி நேற்று துவக்கப்பட்டு நடந்து வருகிறது.