/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவத்தின் குறுக்கே 4 வழி மேம்பால பணி உயரழுத்த மின் வடத்தால் பணிகள் மந்தம்
/
கூவத்தின் குறுக்கே 4 வழி மேம்பால பணி உயரழுத்த மின் வடத்தால் பணிகள் மந்தம்
கூவத்தின் குறுக்கே 4 வழி மேம்பால பணி உயரழுத்த மின் வடத்தால் பணிகள் மந்தம்
கூவத்தின் குறுக்கே 4 வழி மேம்பால பணி உயரழுத்த மின் வடத்தால் பணிகள் மந்தம்
ADDED : செப் 09, 2024 02:46 AM

மதுரவாயல்:மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே நான்கு வழி மேம்பாலம் கட்டும் பணி, அவ்வழியாக செல்லும் உயரழுத்த மின் வடம் மாற்றி அமைக்கப்படாததால் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மதுரவாயல் வழியாக செல்லும் கூவம் ஆற்றின் குறுக்கே திருவேற்காடு, அடையாளம்பட்டு, மதுரவாயல், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலங்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு மழைக்காலத்திலும், கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, தரைப்பாலங்கள் மூழ்கி அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே, உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், இரண்டு இடங்களில் உயர் மட்ட மேம்பாலம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது.
அதன்படி, 31.65 கோடி ரூபாய் மதிப்பில், நொளம்பூர் யூனியன் சாலை -- சன்னதி முதல் குறுக்கு தெரு, பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலும்; 42.71 கோடி ரூபாய் மதிப்பில், சின்ன நொளம்பூர் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலும், இரு மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது.
நொளம்பூர் யூனியன் சாலை மற்றும் சன்னதி முதல் குறுக்கு தெரு வழியாக அமைய உள்ள இருவழி மேம்பால பணிகள், நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தாமதமானது.
தற்போது, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், நான்கு வழிப் பாதையாக அமைய உள்ள சின்ன நொளம்பூரை இணைக்கும் மேம்பால பணிகள், 40 சதவீதம் முடிந்துள்ளன.
இம்மேம்பால பணி நடக்கும் இடம் வழியாக, உயரழுத்த மின் வடம் செல்கிறது.
இந்த மின் வடத்தை மாற்றி அமைக்க, மின்வாரியத்திற்கு 2.5 கோடி ரூபாய், கடந்த பிப்., மாதம் செலுத்தப்பட்டது. ஆனால், இன்னும் மின் வடம் மாற்றி அமைக்கப்படாததால், மேம்பால பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
உயரழுத்த மின் வடம் மாற்றி அமைக்க, மின் கோபுரம் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இங்கிருந்து அம்பத்துார் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, மின்சாரம் செல்கிறது.
இந்த உயரழுத்த மின் வடங்களை மாற்றி அமைக்க, தேவையான நாட்களில் மின் தடை செய்ய வேண்டியிருக்கும் என்பதால், மின் வடத்தை மாற்றி அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.