/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'லிப்ட்'டில் தவித்த 11 பேர் மீட்பு திருமண மண்டபத்தில் சலசலப்பு
/
'லிப்ட்'டில் தவித்த 11 பேர் மீட்பு திருமண மண்டபத்தில் சலசலப்பு
'லிப்ட்'டில் தவித்த 11 பேர் மீட்பு திருமண மண்டபத்தில் சலசலப்பு
'லிப்ட்'டில் தவித்த 11 பேர் மீட்பு திருமண மண்டபத்தில் சலசலப்பு
ADDED : டிச 06, 2024 12:29 AM

மாதவரம்,மாதவரம் பால்பண்ணை, அன்னை வேளாங்கண்ணி நகரில் 'கன்னிகா மகால்' என்ற பெயரில் திருமண மண்டபம் உள்ளது. இரண்டு மாடிகள் கொண்ட இந்த மண்டபத்தில், நான்கு பேர் மட்டுமே ஏறக்கூடிய மின் துாக்கி பயன்பாட்டில் உள்ளது.
இங்கு, நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியின்போது, பகல் 12:45 மணியளவில் 2வது தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு வர, மின் துாக்கியில் 11 பேர் ஏறி உள்ளனர்.
அதிக பாரம் காரணமாக, மின் துாக்கி திடீரென பழுதாகி, முதல் மற்றும் 2ம் தளத்திற்கு இடையே நின்றது. இதனால், அதில் இருந்தவர்கள் அலறினர்.
மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து, மின் துாக்கியின் கதவை உடைத்து, உள்ளே இருந்த 11 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதில் சிக்கியோர், 20 நிமிடத்திற்கும் மேலாக உள்ளேயே இருந்ததால், இருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பினர்.
சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரி முத்து வீரப்பன் கூறுகையில், ''மின் துாக்கியில் ஏறியவர்கள் அனைவரும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதிக எடையோடு இருந்தனர். இதனால் பாரம் தாங்காமல், மின் துாக்கி பழுதாகி இரண்டு தளத்திற்கு இடையே நின்று விட்டது. அனைவரையும் பத்திரமாக மீட்டோம்,'' என்றார்.