UPDATED : ஆக 20, 2026 09:36 PM
ADDED : ஆக 20, 2026 09:22 PM
பூந்தமல்லி:பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பூந்தமல்லி, ஆவடி சாலையில் பருத்திப்பட்டு பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகமாக சுற்றி திரிந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அபினா டிகல், 24, மேஸ் டிக்கல், 19, ஆகிய இருவரையும் பிடித்து சோதனை செய்தபோது, இவர்களிடம் 12 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கடத்திய 9 பேர் கைது
எண்ணுார்:கஞ்சா கடத்தி வந்த ஒன்பது பேர், பல்வேறு இடங்களில் போலீசாரிடம் சிக்கினர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடராமன், 35; லாரி ஓட்டுநர். ஒடிசாவிலிருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, எண்ணுார் தனிப்படை போலீசார், கும்மிடிப்பூண்டி - செக்ஸ்போஸ்ட் அருகே லாரியை வழிமறித்து பிடித்தனர்.
விசாரணையில், விருத்தாசலத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆனந்தன், 41, என்பவர், தனக்கு தெரிந்த லாரி ஓட்டுநரான சேர்ந்த செந்தில்குமார், 34, என்பவர் மூலம், வெங்கட்ராமனிடம் கஞ்சா வாங்கி வர பணம் கொடுத்துள்ளார். மூவரையும் கைது செய்த போலீசார், 6 கிலோ கஞ்சாவுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், பல்லாவரத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், 32, பொழிச்சலுார் ராபின்குமார், 25, பம்மல் முகமது அஸ்ரப், 27, அனகாபுத்துார் வினித், 25, ஆகியோர், பம்மல் அனகாபுத்துார் சுடுகாடு அருகே சுற்றித்திரிந்தனர்.
சங்கர் நகர் போலீசார், அவர்களை பிடித்து சோதனையிட்டதில், ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, சென்னை புறநகர் கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. நால்வரையும் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 11வது நடைமேடையில், திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கோரமண்டல் விரைவு ரயிலில் வந்திறங்கிய, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரஷந்தா சர்கார், 37, சமீம் கேக், 22, ஆகியோர் மீது சந்தேகம் ஏற்படவே, இருவரையும் மடக்கி சோதனை செய்தனர். இதில், 11 கிலோ கஞ்சா சிக்கியது. மேற்கு வங்கத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
