தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 123 ஓட்டுநர் பணியிடங்கள் காலி மின்சார ரயில்கள் இயக்கம் பாதிப்பு

123 ஓட்டுநர் பணியிடங்கள் காலி மின்சார ரயில்கள் இயக்கம் பாதிப்பு

123 ஓட்டுநர் பணியிடங்கள் காலி மின்சார ரயில்கள் இயக்கம் பாதிப்பு


ADDED : செப் 09, 2025 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சென்னை ரயில் கோட்டத்தில், 123 ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளதால் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில், 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில், தினமும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். போதிய ரயில்கள் இல்லாததோடு, வழக்கமாக செல்லும் ரயில்களின் சேவையும் அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது.

ரயில் பாதைகள் மற்றும் யார்டு பராமரிப்பு பணி நடப்பதாக கூறி, வாரந் தோறும் 50க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.

போதிய அளவில் மின்சார ரயில்கள் இயக்காததற்கு, ரயில் ஓட்டுநர் காலி பணியிடங்களை நிரப்பாததே முக்கிய காரணம் என, தெரிய வந்துள்ளது.

சென்னை கோட்டத்தில், அனுமதிக்கப்பட்டுள்ள ரயில் ஓட்டுநர்களின் எண்ணிக்கை 423. ஆனால், 300 ரயில் ஓட்டுநர்கள் மட்டுமே உள்ளனர்; 123 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

இதனால், முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

30 நிமிடம் தாமதம் இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், ஒன்பது நிமிட இடைவெளியில் ஒரு மின்சார ரயில் இயக்கப்படும். தற்போது, 12 நிமிடங்கள் ஆகிறது.

அதுபோல், சென்ட்ரல் - ஆவடி, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை தடத்தில், தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

எனவே, பயணியர் தேவைக்கு ஏற்றார்போல், மின்சார ரயில்களை இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளிகள் சங்கத்தின் செயலர் பாலசந்திரன் கூறியதாவது:

சென்னை ரயில் கோட்டத்தில் மட்டும், 123 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓட்டுநர் பற்றாக்குறையை நிர்வகிக்க விடுமுறை மறுப்பு, ஓட்டுநர்களிடம் கூடுதல் நேரம் வேலை வாங்க வேண்டிய சூழல் உள்ளது.

கூடுதல் பணி பளுவால், ரயில் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய ஓட்டுநர்கள் நியமனம் செய்வதை ரயில்வே விரைவுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறையால், மின்சார ரயில் சேவையை இயக்குவதில் பெரிய பாதிப்பு இல்லை. பராமரிப்பு பணியால் சில ரயில்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில மாதங்களில் பணிகள் முடித்து, முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

அதுபோல், புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரயில் ஓட்டுநர்களும் பயிற்சி முடித்து, பணிக்கு வரும்போது, ஓட்டுநர் பற்றாக்குறை சரிசெய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us