/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிதாக 12,825 பேருக்கு காசநோய் பரிசோதனையில் தகவல்
/
புதிதாக 12,825 பேருக்கு காசநோய் பரிசோதனையில் தகவல்
புதிதாக 12,825 பேருக்கு காசநோய் பரிசோதனையில் தகவல்
புதிதாக 12,825 பேருக்கு காசநோய் பரிசோதனையில் தகவல்
ADDED : டிச 08, 2024 12:24 AM
சென்னை, சென்னையில் 2.88 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட காசநோய் பரிசோதனையில், 12,825 பேருக்கு காசநோய் கண்டறிந்து கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், காசநோய் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'காசநோய் இல்லாத தமிழ்நாடு' பிரசார வாகனத்தை மேயர் பிரியா, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இது குறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
காசநோய் ஒழிப்பு பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். இந்நோய், 'மைக்கோபாக்டீரியம், டியூபர்குளோசிஸ்' என்ற பாக்டீரியாவால் காற்றின் வாயிலாக பரவும் தொற்று நோயாகும்.
இந்நோய் தடுப்பு நடவடிக்கைக்கு, 140 ஆரம்ப சுகாதார மையங்களில் சளி பரிசோதனை செய்ய வசதிகள் உள்ளன. மேலும், மரபணு கருவிகள் வாயிலாக துரிதமாக காசநோய் அறியும் வசதி, 7 நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி உள்ளிட்டவை உள்ளன.
சென்னை மாநகராட்சியில், இந்தாண்டில் இதுவரை, 2.88 லட்சம் பேரிடம் காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், மாநகராட்சி சுகாதார நிலையங்களில், 7,968 பேர்; தனியார் மருத்துவ நிலையங்களில் 4,857 பேர் என, 12,825 பேரிடம் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
அவர்களுடன் தொடர்பில் இருந்த, 8,735 நபர்களில், 5,767 பேருக்கு காசநோய் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
வரும், 2025ம் ஆண்டுக்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதால், 100 நாட்களுக்கு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.