/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அமுதம் மக்கள் அங்காடிகளில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள்
/
அமுதம் மக்கள் அங்காடிகளில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள்
அமுதம் மக்கள் அங்காடிகளில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள்
அமுதம் மக்கள் அங்காடிகளில் ரூ.499க்கு 15 மளிகை பொருட்கள்
ADDED : அக் 23, 2024 12:21 AM

சென்னை, தீபாவளியை முன்னிட்டு, சென்னை கோபாலபுரம், தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடியில், 499 ரூபாய்க்கு, மஞ்சள், புளி உட்பட, 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனையை, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று துவக்கி வைத்தார்.
இந்த மளிகை தொகுப்பு, சென்னை அண்ணா நகர், கொளத்துார் பெரியார் நகரில் உள்ள அமுதம் அங்காடிகள்; கோடம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு, சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, கே.கே.நகர், கோட்டூர், நந்தனத்தில் உள்ள, 10 ரேஷன் கடைகளிலும் விற்கப்படுகிறது.
மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாநிலம் முழுதும் மளிகை தொகுப்பு விற்பனை விரிவுபடுத்தப்பட உள்ளது.
கோபாலபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், வாணிப கழக மேலாண் இயக்குனர் அண்ணாதுரை, சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குனர் பழனிசாமி, உணவு வழங்கல் துறை ஆணையர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில், அமைச்சர் சக்கரபாணி அளித்த பேட்டி:
முதற்கட்டமாக கோபாலபுரம், அண்ணாநகரில் உள்ள அமுதம் அங்காடிகள் நவீனமயமாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் லாப நோக்கமின்றி, தரமான பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. இதனால் தினமும், 50,000 ரூபாய்க்கு கீழ் நடந்த விற்பனை தற்போது, 2.50 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பண்டிகை காலம் கருதி, மக்கள் பயன்பெறும் வகையில், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும், 15 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை, 499 ரூபாய் விலையில், 'அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு' பெயரில் விற்கப்படுகிறது.
இந்த பொருட்கள் அசல் விலை, 650 ரூபாய்க்கு மேல் இருக்கும். அமுதம் அங்காடியில் மளிகை வாங்குவதால் மக்கள் மாதம் 1,000 - 1,500 ரூபாய் வரை சேமிக்கின்றனர்.
தீபாவளிக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு மாதம், 8,500 டன் கோதுமை ஒதுக்கிய நிலையில், 25,000 டன் வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
அந்த கோரிக்ககையை ஏற்று, 17,100 டன் கோதுமை வழங்கப்படுகிறது. அதற்கு ஏற்ப கார்டுதாரர்களுக்கு கூடுதல் கோதுமை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.